பாதியில் விட்ட வாசிப்பு – தமிழரின் தொன்மை – குணா

தமிழரின் தொன்மை நூலை வாங்கி 7 ஆண்டுக்கு மேல் ஆகிறது. இந்தா அந்தா என வாசிக்க ஆரம்பிக்கவே இவ்வளவு நாள் ஆகிவிட்டது. இலக்கிய வாசிப்பில்  இருக்கும் நாட்டம் ஆய்வு நூல் வாசிப்பில் இல்லாததே அதற்கு காரணம். ஆம், தமிழரின் தொன்மை தன்னை ஆய்வு நூலென அறைகூவி வாசிக்க கடை விரிக்கும் நூல். ஆனால், இதுவரை வாசித்த 80 பக்கங்களில் அது விவாத நூலாகத்தான் என் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. வாசித்த வரையிலுமே கூட செம்பு, வெங்கலம் அன்றி இரும்பு மட்டுமே பயன்படுத்தியதால் அன்றி தமிழரின் காலம் வெறும்  2000 ஆண்டு ஆகாது என்னும் வாதம் மட்டுமே கொஞ்சமேனும் ஏற்றுக் கொள்ளுமாறு உள்ளது. அதற்கும் வலுவான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. பின் ஆரிய மாயை பற்றி பேசுகிறார். ஆரியக் கோட்பாடே தமிழ் பிராமணக் கோட்பாடான வேதங்களில் இருந்து பெறப்பட்டதென வாதாடுகிறார். வேதங்கள் தமிழிலேயே இயற்றப்பட்டிருக்க வேண்டுமென்கிறார்.  அதை வாய்மொழி மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டதென்கிறார்.  அதனாலேயே அது மறை என தமிழில் அழைக்கப்பட்டதென்கிறார். இதற்கு காஞ்சிப் பெரியவரின் பல்வேறு மேற்கோள்களைப் பயன்படுத்துகிறார். இது எல்லாவற்றையும் விட்டு விட்டு திடீரென அந்தணர்கள் யாகங்களில் பசுக்களைப் பழியிட்டனர் என்கிறார். அதற்கு கந்த புராண பாடலையும் , சம்பந்தர் பாட்டையும் காட்டுகிறார். இனி அடுத்த 420 பக்கங்களில் என்னென்ன செய்யப் போகிறாரோ?

மேலும் இருபது பக்கங்கள் வாசித்து எப்படியோ முட்டி மோதி 100 பக்கத்துக்கு மேல் வாசித்து விட்டேன். குணா அவர்கள் சங்க இலக்கியத்தில் இருந்து மேற்கோள் காட்டியிருக்கும் பாடல்களை வாசிக்கும் போது அவரின் தமிழறிவு மீது பெரும் மதிப்பும் வியப்பும்  உண்டாகிறது, இருந்தும் வாசிப்பில் ஒரு பிடிப்பை உண்டாக்க முடியவில்லை. தமிழர்கள் மூத்த குடி என்பதைத் தாண்டி தமிழர்கள் மட்டும் தான் மூத்த குடி எனும் வாதத்தை கையில் எடுத்துக் கொண்டு சிறிதும் பெரிதும் என தொடர் விவாத மனநிலையிலேயே எழுதப்பட்டிருக்கும் நூலை இதற்கு மேல் வாசிக்க முடியவில்லை. முழுதாய் வாசித்த நண்பர்கள் யாராவதிருந்தால் உங்கள் கருத்துகளைப் பதிவிடவும்.

வாசிப்பனுபவம் – பிறகு – பூமணி

இதற்கு முன்னர் பூமணியின் எந்தப் படைப்பையும் வாசித்ததில்லை. ஆனால் இனி ஒவ்வொன்றையும் தேடித் தேடி வாசிக்க வேண்டும் என்னும் வேட்கையை உண்டாக்கிவிட்ட நாவல் ‘பிறகு’.

நெடுநேரம் யோசித்தும் நாவலுக்கு ஏன் ‘பிறகு’ என்று தலைப்பிட்டார் என அடைபடவில்லை. நாவலின் மையப் பாத்திரமான அழகிரி தன் வாழ்வில் எத்தனை எத்தனையோ இன்னல்களைக் கண்ட பிறகும் இத்தனைக்கும் ‘பிறகு’ம் வாழ வாழ்வு உண்டு என வாழ்வை அதன் ரசத்தோடு வாழ்கிறானே அதனால் வைத்திருப்பாரா? இல்ல, பெறகு பெறகுனு பெறகு போட்டு கேட்க அத்தனை கதைகள் இந்த நாவல் மனிதர்கள் வாழ்வுல இருக்கே அதனால ‘பிறகு’னு வச்சாரா? சரியா சொல்லத் தெரியல.

சுதந்திரத்திற்கு பிற்பாடு ஒரு கிராமத்தில் ஏற்படும் சமூக அரசியல் மாற்றங்களை , அது சந்திக்கும் சுக துக்கங்களை, நல்லது பொல்லதுகளை அவ்வவ்வாறே பதிவு செய்திருக்கும் நாவல் தான் ‘பிறகு’.

கதையின் பெரும்பகுதி ஊர் சக்கிலியக் குடியைச் சுற்றியும் சார்ந்தும் எழுதப்பட்டிருப்பினும் கதை எந்த விதமான சார்பும் இன்றி நடுநிலையோடு நகர்கிறது. சக்கிலியன், பகடை, போன்ற பதங்களை சர்வசாதாரணமாக நாவலில் பயன்படுத்தியுள்ளார் நாவலாசிரியர். காரணம், அந்த காலகட்டத்தில் சமூக நிலைமை அப்படித் தான் இருந்துள்ளது. அதற்காக சக்கிலிய மக்களுக்கு எந்த உரிமைகளும் இல்லையா? கை கட்டி மார்பொடுக்கி தலை குனிந்து தான் அவர்கள் மேல் சாதிகாரர்களிடம் பேச-நடக்க-பழக வேண்டுமா என்றால், இல்லை. முழுக்க அப்படி இல்லை போல. தாழ்ந்த சாதி(என பெரும்பான்மை ஆதிக்க சமூகத்தால் கருதப்பட்டவர்கள்/படுகிறவர்கள்) வெகு சாதாரணமாக மேல்குடி(என பெரும்பான்மை ஆதிக்க சமூகத்தால் கருதப்பட்டவர்கள்/படுகிறவர்கள்) மக்களுடன் நையாண்டித் தனத்துடன் பேசிப் புழங்கி இருந்திருக்கிறார்கள். என்ன, அந்த மேல்குடிகாரர் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துடன் இருக்க வேண்டும். காவக்கார கந்தையா அப்படிப்பட்டவர் தான். நல்ல சொத்து சொகத்துடன் இருந்து பின் நொடிந்து போன ‘வாழ்ந்து கெட்ட’ மனிதர். அவரைப் போலவே அவர் மனைவியும் நல்ல மனுசி. ஊர் பெரியவர்கள் வில்லுச்சேரிக்காரர், அப்பையா, குருசாமி நாயக்கர் ஆகியோர் சிறிய மனம் படைத்தவர்கள். சுப்பையா ஆசாரி, நடுக்கடை சங்கரலிங்கம் பிழைப்பை மட்டும் பார்க்கும் உழைப்பாளி ரகம். பெஞ்சாதியை அப்பையாவின் தாகத்துக்கு நனைக்கக் கொடுத்துவிட்டது கூட தெரியாத மாடசாமி , ஊர்காலி மாடு மேய்த்து ஊர் நன்மைக்கென மொட்டை அடிக்கப்பட்டு கரும்புள்ளி குத்தப்படும் கருப்பன் போன்றோர் ஏமாளி ரகம், அழகிரி மனைவி ஆவுடை, ஓய்ந்த காலத்தில் குடிக்கத் தண்ணீர் எடுத்துத் தரக்கூட ஆளற்ற சக்கண்ணன், ஓடித் தேடி பொண்ணெடுத்து பட்டாளத்துக்கு சென்று பவுசான மகனால் கைவிடப்படும் மருமகள் வீட்டாருடன் பேசவும் முடியாமல் , நீங்கவும் முடியாமல் தவிக்கும் முத்து மருகன், பெற்ற தாயாலேயே கைவிடப்படும் சோலை, கட்டியவனை கைவிட்டு, பெற்ற பிள்ளையை கைவிட்டு, நம்பிக்கையாய் மறுகை சேர்ந்து , கூடி உண்டாகி , மகவு ஈனி, பொல்லா விதியால் வெசனங்கொண்டு தன்னையும் மாய்த்து, பால் குடி மாறா மகவையும் மாய்த்து, சார்ந்த எல்லோர் வாழ்க்கையிலும் ‘வடு’வான அழகிரி மகள் முத்துமாரி போன்றோர் சோக ரகம். இப்படிக் குறைவான கதை மாந்தர்களே நாவலில் திரும்பத் திரும்ப வருகின்றனர். இவர்களின் வாழ்க்கை மட்டுமே திரும்பத் திரும்ப வேறு வேறு சந்தர்பங்களில் சொல்லப்படுகிறது. அதனால் கதையுடனும், களனுடனும், அதன் மனிதர்களுடனும் ஒட்டியே பயணிக்க முடிகிறது.

மொத்தத்தில் ‘பிறகு’ நாவல் ஒரு நல்ல வாசிப்பனுபவமாகவும், சுதந்திரத்திற்கு பிறகான காலத்தில் தென் தமிழகத்தின் கிராமத்தில் சாதிகளுக்கிடையேயான புழங்குமுறை, புரிதல் எவ்வாறிருந்தது என்பதை ஒருவாறு ஊகிக்க சொல்லிக் கொடுத்திருக்கிறது.

குழந்தைகளுக்கான யானைக் கதை – 1 – தேனும் கரும்பும்

ஒரு ஊரில ஒரு குட்டிப் பையன் இருந்தானாம்.

ஒரு நாள் அவன் அவங்க ஊருக்கு பக்கத்துல இருக்கிற ஒரு காட்டுக்குப் போனானாம்.

அங்க ஒரு யானக் (யானைக்) குட்டி அரச மரத்துக்கடியில சந்தோசமா விளையாடிக் கிட்டிருந்ததாம்.

அப்போ அந்த குட்டிப் பையன் அந்த யானைக் குட்டிட போய், “என்ன யானையாரே ரொம்ப சந்தோசமா இருக்கிங்க போல என்ன விசேசம்” அப்படினு கேட்டானாம்.

அதுக்கு யானையார் சொன்னாராம், நான் இன்னைக்கு ஓடையில தண்ணீ குடிச்சிட்டு வந்து கிட்டு இருந்தனா.. அப்போ ‘என்னக் காப்பாத்துங்க என்னக் காப்பாத்துங்க’ னு ஒரு குரல் முறம் போன்ற என் பெரிய காதுகளுக்குக் கேட்டுச்சு’.

என்னனு பாத்தா ஒரு வேடன் அகழில விழுந்து எந்திரிக்க முடியாம சகதில சிக்கிகிட்டிருக்காரு. எப்படிடா அவருக்கு உதவி செய்யுறதுனு யோசிச்சுகிட்டுருக்கும் போது அங்க ஒரு நீளமான கம்பு இருக்குறத பார்த்தேன். அந்த கம்ப எடுத்து, அவர்ட்ட நீட்டுனேன். அவரும் அத பிடிச்சுக்கிட்டு மெல்ல மேல ஏறி வந்துட்டாரு. வந்து, என்னை காப்பாத்துனதுக்கு நன்றி யானையாரேனு சொல்லிட்டு நெறையத் தேனும் கொடுத்துட்டுப் போயிட்டாரு.

எனக்கு தான் தேன் பிடிக்காதே இத என்ன செய்யலாம்னு யோசிச்சுக்கிட்டே நடந்து என் நண்பர் கரடியார் வீட்டு பக்கமே வந்துட்டேன்.

அடடா கரடியாருக்குத் தேன் ரொம்ப பிடிக்குமே அவருக்கு இந்த தேனைக் கொடுத்தா என்னனு தோனுச்சு.

சரினு, அவரு வீட்டு கதவ தட்டி,வணக்கம் கரடியாரே, இந்தாங்க உங்களுக்குப் பிடிச்ச தேன் அப்படினு கொடுத்தேன். அவருக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். ‘ ரொம்ப நன்றி யானையாரே’ அப்படினு சொல்லிட்டு அவரு வீட்டுல இருந்த ஒரு கட்டு எனக்கு கரும்ப எடுத்து குடுத்துட்டாரு. கரும்புனா எனக்கு ரொம்ப புடிக்குமா அதனால இப்ப எனக்கும் ரொம்ப சந்தோஷமாயிருச்சு.

ரெண்டு பேரும் ஒன்னா ஒக்காந்து தேனையும் கரும்பையும் சாப்பிட்டுட்டு ரொம்ப நேரம் விளையாடிட்டு இருந்தோம். அதனால தான் இன்னைக்கு இவ்வளவு சந்தோஷமா இருக்கேன். அப்படினு யானையார் அவரோட கதைய சொல்லி முடிச்சாரு.

அப்புறம் அந்த குட்டி பையனும் அந்த குட்டி யானையும் அரச மரத்தடியில உட்காந்து நிலா வர்ற வரைக்கும் விளையாடுனாங்களாம். அதுக்கு அப்புறம் குட்டி பையன் வீட்டுக்கு போய் தூங்கிட்டானாம்.

அவ்ளோ தான் கதை முடிஞ்சிருச்சு.

சூல் – சோ.தர்மன் – வாசிப்பனுபவம்

‘சூல்’ தமிழில் வந்துள்ள மிக முக்கியமான நாவல். எட்டையபுர சமஸ்தானத்தின் கீழ் இருந்த உருளைக்குடி என்னும் கிராமம் மன்னராட்சி காலத்திலும், வெள்ளையர்கள் காலத்திலும், பின் சுதந்திரத்திற்குப் பிற்பாடும் எப்படி இருந்தது என, ஒரு நூறு வருட காலத்தில் அந்த ஊரின் நிலவியலில், வாழ்முறையில், சமுதாய அமைப்பில், அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றி விரிவாக அலசி பேசும் நாவல் ‘சூல்’.

நாவல் பாணியில் எழுதப்பட்டிருந்தாலும் ஒரு ஆய்வு நூலுக்குரிய அத்தனை அம்சங்களும் சூல் நாவலில் உள்ளது. எட்டையபுர சமஸ்தானம் இருந்த காலத்தில் நீர் மேலாண்மைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கண்மாய்கள், குளங்கள் எப்படி அந்தந்த ஊர் மக்களாளேயே நிர்வகிக்கப்பட்டன. தடையற்ற, சமச்சீரான நீர் பங்கீட்டுக்கென என்னென்ன ஊர்கட்டுப் பாடுகள் இருந்தன . கண்மாய், குளங்களின் பராமரிப்பு. விவசாயமே பிரதானமென இருந்த சமூகத்தில் நீர் மேலாண்மைக்கென்றே இருந்த ‘நீர்பாச்சி’ என்னும் தனித்துவமான பணி. அதில் இருந்த சவால்கள், அதற்கிருந்த அதிகாரங்கள், என நீர் மேலாண்மைக்கான முக்கிய கையேடாகவே இந்த நூலைக் குறிப்பிடலாம்.

நாட்டாரியல் அம்சங்களான சிறு தெய்வ வழிபாடு, மக்களின் நம்பிக்கைகள், வழிபாடுகள், பழக்கவழக்கங்கள், சமூகத்தில் சாதி வாரியாக இருந்த வரையறைகள் என பல விசயங்கள் பேசப்பட்டுள்ளன. உருளைக்குடி ஊரில் உள்ள பல சிறு தெய்வங்கள் உருவான கதையே கூட நாவலில் கூறப்பட்டுள்ளது.

இவை தவிர பல்வேறு வகைப்பட்ட மனிதர்களை பல்வேறு வகையான சூழ்நிலைகளில் நிறுத்தி அவர்தம் எண்ண கோல-அலங்கோலங்களை நாவல் அலசுகிறது.

மேலும், சூழலியல், இயற்கை விவசாயம் பற்றிய குறிப்புகளும் தகவல்களும் புத்தகமெங்கும் விரவியுள்ளன. தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதியில் சாதாரணமாகக் காணக் கிடைக்கும் பறவைகளிலிருந்து, கண்டும் விடுபட்டுப் போகும் பல நீர்ப் பறவைகளை ஓர் ஆய்வாலருக்குரிய அக்கறையுடன் பட்டியலிடுகிறார் ஆசிரியர்.

இது போக, சுதந்திரம் பெற்ற முதல் பத்திருபது ஆண்டுகளில் வளர்ச்சி வளர்ச்சி என்னும் போதையில் நம்மை ஆண்டவர்கள் செய்த தவறும், அதன் பயனாய் நாம் இழந்துவிட்ட இயற்கையோடியைந்த நம் வாழ்க்கை முறையையும் நாவலின் இறுதி அத்தியாயங்களில் தெள்ளத் தெளிவாக அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டு நாவல் தன் நேரடி அரசியல் குரலையும் பதிவு செய்கிறது.

எருது – உலக மொழிச் சிறுகதைகள் – கார்த்திகைப் பாண்டியன்- வரி விமர்சனம்

எருது உலக மொழிச் சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் வாசித்த மொழிப் பெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புகளில் முக்கியமானது. நல்ல படைப்புகளைக் கொண்ட தொகுப்பு. எட்கர் கெராத், டோனி மாரிசன், ரைஸ் ஹீக்ஸ், ஹெர்மன் ஹெர்ஷலே, மோ யான் ஆகியோரின் கதைகள் மிகவும் நல்ல கதைகளாகத் தெரிகின்றன. இதில் மோ யானின் எருது மிகவும் நல்ல முறையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மற்ற கதைகளில் மொழிபெயர்ப்பிற்கென்றே உரித்தான வாசிப்பு சிக்கலைக் கொடுக்கும் மொழி உண்டு.இருந்தும் இத்தொகுப்பு எதனால் முக்கியமான ஒன்றாக ஆகிறதென்றால் அது அறிமுகப்படுத்தும் கலவையான எழுத்தாளர்களாலும், வித்தியாசமான சிறுகதைக் களங்களாலும். அநேக கதைகளில் அந்தந்த நாட்டின் கலாச்சாரப் பிரதிபலிப்பு தெரிவது எதேச்சையாக அமைந்த ஒன்றா அல்லது தொகுப்பாசிரியர் அதை ஒரு அளவீடாகக் கொண்டு கதையைத் தேர்ந்தெடுத்தாரா எனத் தெரியவில்லை. ஆனால் தொகுப்பிற்கு அது ஒரு பலத்தையும் தனித்துவத்தையும் தருகிறது. ‘எருது’ தொகுப்பு வாசித்த பிற்பாடு இதில் உள்ள எழுத்தாளர்களின் மற்ற படைப்புகளை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் தவிர்க்க முடியாத ஒன்று. தொகுப்பின் முக்கியத்துவத்தை இதைத் தவிர வேறேதும் உணர வைத்துவிடுமா என்ன?

கவிதை – நிறங்களின் கடவுள்

நூறு நூறு நிறங்களின் கடவுள்
நீச்சல் கற்றுக் கொண்டிருக்கிறார்
அவர் இடுப்பில் அம்மா கடவுளின் அரக்கு நிற அழுக்குச் சீலைத் தொப்புள் கொடியாய் அலைந்து கொண்டிருக்கிறது
சீலையின் மறுமுனையில் அப்பா கடவுளின் கைகள் அதி சிரத்தையாக கடவுளின் கைகளுக்கு நீச்சலை அனுப்பிக் கொண்டிருக்கின்றன
முதலில் கால்களுக்கான அசைவுகள்
பின் கைகளுக்கானவை
பின் ஒரு நொடி மேல் வந்து மூச்செடுப்பது
என
நீச்சல் பாடங்கள்
கடவுளின் கைகளை மீறியும்
சென்று கொண்டிருந்த பொழுது
கிணறு இதய வடிவ அலை வளையங்களால் சூல் கொண்டிருந்தது
வளையங்கள் தொடர்ந்து ஒன்றை விட்டு ஒன்று பிரிந்தன
கடவுள் நீந்துகிறார்
குஞ்சு மீன்கள் நீந்துகின்றன
சீலை நீந்துகிறது
கிணறு நீந்துகிறது
வளையங்கள் நீந்துகின்றன
சூரியனின் ஒளிமினுப்பு கிணறெங்கும் சரம் சரமாய் இறங்குகிறது
கூடவே கடவுள் ஒரு மாங்கனி அளவு கருணையை உதிர்க்கிறார்
அற்புதம் ஒன்று அரங்கேற்றப்படுகிறது
துமி நீர் + துளி ஒளி
ஒரேயொரு நொடி நிகழ்ந்து மறைகிறது வண்ணப் பிரிகை
அதே நொடி
கிணற்றின் இருளாழத்திலிருந்து
முதன் முறையாக கடவுளை அறிந்தது நூற்றாண்டு கண்ட இளஆமை.

உவர் – சிவசித்து – வாசிப்பனுபவம்

பொதுவாகவே ஒரு புத்தகத்தை வாசித்து முடித்த உடன் அது தரும் அனுபவங்களை எழுதுவதில்லை. ஓரிரு நாட்கள் முதல் ஓரிரு மாதங்கள் வரை ஆறப்போட்டு அப்போது வரை மனதில் நின்று அதிர்வடங்காமல் இருக்கும் புத்தகங்கள்,கதைகள் பற்றி எழுதுவது தான் என் வழக்கம். சித்துவின் கதைகளை வாசித்து இந்தா அந்தா என ஒரு வருடம் ஆகிவிட்டது. அடுத்தடுத்த வாசிப்பு, சொந்த காரியமாக பயண அலைச்சல்கள், பல அதி அற்புதமான சோம்பல் பொழுதுகள் என இவ்வளவு நாள் ஆகிவிட்டது. அதனால் ஒவ்வொரு கதையைப் பற்றியும் தனித்தனியாகக் கூறும் வாய்ப்பு இப்போது இல்லை. அதற்கு மறுவாசிப்பும் அவசியம். வாசித்த பிறகும் சோம்பல் படாது எழுத ஆரம்பிக்க வேண்டும். அது கூடாமல் போகவே வாய்ப்புகள் அதிகம். ஆதலால் முதல் முறை வாசித்ததை வைத்தே எழுதுகிறேன். அது போக, தொகுப்பின் ஒட்டு மொத்த வாசிப்பனுபவம் இன்னும் ஈரம் காயாது நினைவில் உள்ளது. அது உவர் தொகுப்பை அறிமுகம் செய்யும் அளவிற்காவது உதவும் என்னும் எண்ணத்தில் தான் இந்த கட்டுரையைத் தொடர்கிறேன்.

சித்துவின் கதைகள் அனைத்துமே என் புற உலகிற்கு நெருக்கமானவை. புளியங்குடி, சிவகிரி, ராயகிரி என நான் அறிந்த, வளர்ந்த நிலப்பரப்பிலிருந்து எழுதப்பட்டவை. அதனாலேயோ என்னவோ நான் அறியாத அளவுக்கு அகவுலக நெருக்கம் கொண்டுவிட்டவை. உவர் கதையில் வரும் நீலமேகம் மாமாவை அதன் பின் பலபேரிடம் கண்டுவிட முயன்றிருக்கிறேன். மலையாங்குளம் நைனா , லோடுமேன் இருமராஜ் அண்ணன், ரெங்கம்மா ஆட்டோகாரர் இப்படி பல பேரிடம். அந்த அளவிற்கு மண்ணோடு வேர்விட்டு ஊன்றி நிற்கும்படி எழுதப்படிருக்கும் பாத்திரம். உவர் கதையில் சித்து ஒரு நிலத்தை அறிமுகப்படுத்துகிறார். வளமான மண் கொண்ட நிலபரப்பிற்கிடையே ஓர் உவர் நிலம். திரும்ப திரும்ப வண்டல் அடித்து கரம்பை அடித்து அது பண்படுத்தப்படுகிறது. இருப்பினும் அந்த மண்ணின் உவர் தன்மை மேல் வராமலில்லை. அதைப் போலவே நீலமேகம் மாமாவின் மனதும் எப்போதும் வண்டல் அடித்து செழிம்பாக இருப்பினும் அதன் அடியாழத்தில் மீட்க முடியாத ஒரு உவர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் உழலும் இருவர் இருக்கின்றனர். அவர் மனைவியும், வாத்தியாரும். அவர்களுக்கு இடையேயான உறவு பற்றி நீலமேகம் மாமாவே கூறுவதும், அதன் மேல் அவருக்கு இருந்த புரிதலும் தான் உவர் கதையை முக்கியமான ஒன்றாக்குகின்றன. இதே தொகுப்பின் ‘சக்திகெடா’வில் வரும் அருவா நீலமேகம் மாமா கைக்கு வர வெகு நேரமாகாது. ஆனால் அப்படி வராததால் தான் ‘உவர்’ பெரும்பாலான கதைகளிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது. உணர்வும் அறிவும் மல்லுக்கட்டிக் கொண்டு கதையாடும் நாயகனாக நீலமேக மாமா மனதில் பதிகிறார்.

உவர், பிரில்லு பாவாடை, கெவி,English is a funny language ஆகிய கதைகளைத் தொகுப்பு வருவதற்கு முன்னமே தனிக் கதைகளாக இதழ்களிலோ இணையத்திலோ வாசித்திருக்கிறேன். ‘விடியல்’ கதையை முதன்முதலாகத் தொகுப்பில் தான் வாசித்தேன். உவரை விட சிறப்பாக வந்திருக்கும் கதை. கதையின் முதல் பத்தியை வாசிக்கும் யாரையும் கதையோடு கட்டிப் போடும் எழுத்து நடை. தவுடனின் பாத்திரப் படைப்பு வெகு இயல்பாக நம்மில் வந்து ஒட்டிக் கொள்ளும். தவுடன், அவனின் அம்மா, அவன் ஓடும் மகேந்திரா வேன், அதன் டிரைவர், அவர்களுக்கிடையேயான உறவு, பூக்காரியின் மகள், வாசுதேவநல்லூர் திருவிழாவில் வரும் வயசாளி இப்படி பல விசயங்கள் வெகு கச்சிதமாக எழுத்துச் சோர்வின்றி கூறப்பட்டிருக்கின்றன. எவ்வித பிடிமானமும் இல்லாது, விழித்து ஓடும் அவசியமும் அற்ற வாழ்வின் ஒரு அதிகாலை பளபளவென விடிகிறது. அதன் பளபளப்பில் தவுடனுக்கு பல பல விடயங்கள் அடைபட்டு விடுகின்றன. அவன் தனக்கான அடையாளத்தை, வாழ்வுக்கான அஸ்திவாரத்தைப் போட்டுக் கொள்ள நினைக்கிறான். அதோடு கதை முடிகிறது. ஆனால் அவ்வளவு எளிதில் நம்மால் அங்கிருந்து நகர்ந்து வந்துவிட முடியாது.

‘வளயம்’ என்றொரு கதை. ஊர் புறங்களில் வேட்டை நாய் வளர்ப்பது வேட்டைக்குச் செல்வது பற்றிய கதை. ஒரு நாள் பிழைப்பையும் விட்டு , நல்ல சோறு, தண்ணீர் இன்றி பதினைந்து இருபது கிலோமீட்டர் ஓடியும் நடந்தும் மலங்காட்டில் அவர்கள் திரிவது எதற்கு? கிடைக்கும் சில முயல்களுக்காவா? நிச்சயம் இல்லை. அதை சாதாரணமாவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அது ஒரு தனி உலகம். அதன் மேல் நாட்டம் கொண்டு , அதில் உழலும் சிலருக்கே சாத்தியப்படும் உலகம். வேட்டைக்குச் செல்பவர்கள் அது பற்றி சொல்லும் போதே, அதற்கான தேதி குறிக்கப்பட்டவுடனேயே பரபரப்படைந்து விடுகின்றனர். பத்து வயது குறைந்து விடுகிறது. கால்களில் தசை நார்கள் இறுகிவிடுகின்றன. உள்ளுக்குள் வேட்டை இரத்தம் பாயத் தொடங்கிவிடுகிறது. அந்நியர்களால் பிரவேசிக்க முடியாத நிலம் அது. நாகரிகம் என்னும் போர்வையினாலும், வனப் பாதுகாப்பு எனும் போர்க் கொடியினாலும் கொஞ்சம் கொஞ்சமாக மூச்சடைக்கப்படும் ஓர் உலகம். சித்து போன்றோர் இந்த உலகத்தைப் பற்றி இன்னும் விரிவாக எழுத வேண்டும். ‘வளயம்’ கதையே கூட ஒரு பெரும் நாவலின் ஒரு பகுதி போல் தான் பட்டது. நிறைவு சாத்தியப்பட்டதாகத் தெரியவில்லை.

பொதுவாக ‘உவர்’ தொகுப்பின் வாசிப்பில் சவாலாக நான் கருதுவது சிறுகதை திடீரென கிளைத்து எங்கோ சென்று திரும்புவது. ‘கெவி’, ‘விடியல்’, ‘உறைதல்’ போன்ற கச்சிதமாக எழுதப்பட்ட கதைகளைத் தவிர்த்து அநேகமாக மற்ற எல்லா கதைகளுமே இடையிலேயே தனது பாதையை விட்டு விலகிச் செல்வதை உணர முடிகிறது. அதை ஆசிரியர் தன் எழுத்து வன்மையால் மீட்டு இழுத்து வருகிறார் என்பது வேறு விடயம். இருந்தும் உவர் போன்ற ஆகச் சிறந்த கதைகளிலேயேக் கூட இந்தப் பிரச்சனை உள்ளது. வாசித்து நாள்பட்ட பின்னான இப்போது துல்லியமாகக் கூற முடியவில்லை என்றாலும், மையத்தை விட்டு விலகித் திரிந்த ‘உவர்’ கதையை ‘ கூதியாங் குளிர்ந்து போனான் மச்சான்’ என்னும் வரி தான் மீண்டும் இழுத்து வந்து தரையில் நிறுத்தியதாக நினைவு. இதை உணர்ந்ததும் மூன்றாம் முறை வாசிப்பின் போது தான்.முதல் இரு முறை எதையும் கவனிக்க விடாத அளவிற்கு கதையின் ஓட்டம் இருந்தது குறிப்பிடத் தக்கது.

மொத்தத்தில் ‘உவர்’ மிக முக்கியமானதொரு சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்பிலேயே இவ்வளவு ஆழமான கதைகளை எழுதுவதெல்லாம் லேசான காரியமில்லை. இதற்கு முன் நான் வாசித்து வியந்த முதல் தொகுப்பென்றால் அது நாஞ்சில் நாடனின் ‘தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்’. சிவசித்து இந்த மண்ணிற்கு கிடைத்த மிகச் சிறந்த கதை சொல்லி. அவரின் அடுத்த அடுத்தத் தொகுப்புகள் இன்னும் அதிகமாக இந்த மண்ணையும், மக்களையும் நவீன இலக்கிய வெளியில் உலவ விடட்டும். அதை காலம் சாத்தியமாக்கட்டும்.

தொகுப்பு – உவர்

வகை – சிறுகதைகள்

ஆசிரியர் – சிவசித்து

பதிப்பகம் – மணல்வீடு

வால் – சபரிநாதன் – கவிதைகள் – வரி விமர்சனம்

2000 ஆண்டுகள் கவிதை புழங்கி வரும் ஓர் மொழியின் கவிதையில் உவமைகள் நைந்த செருப்பாக ஆகும் வாய்ப்புகள் அநேகம். சபரிநாதன் அத்தகைய வாய்ப்புகளை தன் தலையை சிலுப்பி கோல்-ஐத்(Goal) தடுத்துவிடும் கோலியின் (Goalie) லாவகத்துடன் பல கவிதைகளில் செய்திருக்கிறார். பல்வேறு கவிதைகள் அதில் கையாளப்பட்டிருக்கும் உவமை லாவகத்தால் அடுத்த வரிக்கு நகர விடாமல் செய்கின்றன(இங்கு நங்கூரமிடச் செய்கின்றன என எழுதும் போது நைந்தச் செருப்பின் இழுவைச் சரசரப்பு உங்களுக்கும் கேட்கும்).

ஒரு கவிதையில் மறதிக்கான உவமையாக ஆழியைப் பயன்படுத்துகிறார்.

‘ஆழி ஆழம் அதனினும் ஆழம் மறதி’ என்னும் தொனியில் ஒரு வரி.

இந்த வரியைக் கடந்து செல்ல முடியுமா? கல்லைக் கட்டி கடலில் இறக்கியது போல ஆழியும் மறதியும் மாறி மாறி இழுக்கின்றன. காலுக்கு கீழ் மண் சரிகிறது. நிலை கொண்டு அடுத்த வரிக்குச் செல்ல வெகு நேரம் பிடிக்கிறது.

மண்டகப்படிச் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்ட புழுத்த வண்டிக்காலாகப் படுத்திருந்தோர் எட்டிப் பார்க்கின்றனர் என ஒரு வரி

ரயில் கடவையைக் கண்ட வேகமானியென சரிகிறது குறி என ஒரு வரி

இப்படி எக்கச்சக்கமான ரசிக்கும் உவமைகள் உண்டு.

கவிதை – அழகிய ஆரஞ்சு நிறத் தொப்பி

கறை படிந்து நிலத்தில் கிடக்கும் ஆரஞ்சு நிற தொப்பிக்குரியவன் நேற்று மதியம் வேலையை விட்டிருக்கலாம்
அல்லது
தவறிய விதம் அறியாது இன்னும் அந்த ஒட்டக எந்திரத்தில் உழைத்துக் கொண்டிருக்கலாம்
இல்லை
நாம் அறியாத பண்டிகையைக் கொண்டாட நாம் அறியாத ஊருக்குச் சென்றிருக்கலாம்
அங்கு நம் நா அறியாத பண்டம் பிரபலமாய் இருக்கும்
பாதி வழியில் பயணச்சீட்டு பரிசோதகரால் இறக்கியும் விடப்பட்டிருக்கலாம்
குடிக்கத் தண்ணீர் வைத்திருந்தானோ என்னவோ?
அல்லது
நுரையீரல் நோய் கண்டு மரித்தும் போயிருக்கலாம்
இருந்தும்
கறை படிந்து நிலத்தில் கிடக்கும் அழகிய ஆரஞ்சு நிற தொப்பியே
ஓ அபூர்வமே! ஓ பரிதாபமே!
கவலையுறாதே
உனக்காகவே தயாராகிக் கொண்டிருக்கிறது
தரமான இன்னொரு மண்டை.

கவிதை – உலர் திராட்சைகள்

உலர்ந்த திராட்சை போல் தனித்து கிடக்கும் தனிமைகளில் ஒன்றையெடுத்து வாயில் போட்டான்

பற்களின் இராட்சத்தில் வழிகிறது இனிமை ரசம்

நஞ்செனக் கண்டத்தைக் கவ்விய இனிமையைப் புளிச்செனத் துப்பிப் பின் பார்த்தான் 

கழிவிரக்கம் வழியும் அதன் நோக்கிலிருந்து விலகித் திரும்பி அமர்ந்தான் 

காரிருளில் வெளியின் கர்பத்திலிருந்து ஆயிரமாயிரம் கனவுகளின் பிளிறலுடன் கடந்து சென்றது தொடர் வண்டி ஒன்று

ஊன்றி லயித்திருந்த பாதத்தின் அருகாமையில் ஊர்ந்து சென்றது அரவ மொன்று

செங்கோவைப் பழமாய் பழுக்கும் விடியலின் நல்ளொளி

இருளைத் தின்று அடர்ந்து படர்ந்தது தனிமையை விரட்டிக் கொண்டிருந்தது

விரிந்து துலாவும் அவன் கை வசம் இன்னும் சில உலர் திராட்சைகள் உள்ளன.