முறையிட ஒரு கடவுள் – சர்வோத்தமன் சடகோபன் – வரி விமர்சனம்

சர்வோத்தமன் சடகோபனின் ‘முறையிட ஒரு கடவுள்’ தொகுப்பு வாசித்துக் கொண்டிருக்கிறேன். நல்ல கதைகள் கொண்ட தொகுப்பு தான் . வெவ்வேறு வேலைகளில் இருக்கும் நடுத்தர வயது இளைஞர்கள் வேலை சார்ந்து பலவிதமான அக/புற உலகங்களில் உலவும் கதைகள். ஆனால் கதை சொல்லும் பாங்கு தான் அலுப்பூட்டுகிறது . உரையாடல்களற்ற கதை சொல்லும் பாணி அரத பழையது. செய்தித் தாள் வாசிப்பதைப் போன்றது. இருந்தும் சர்வோத்தமனின் சில கதைகள் சிறப்பாக உள்ளன. அவற்றின் புதிர் தன்மை அல்லது அதில் உலவும் பாத்திரங்களின் புதிர் தன்மை கதையை சுவாரஸ்யமாக்குகிறது. ஒரு சில கதைகளில் அந்த டெக்னிக்கும் கைவிடும் போது கதை அந்தரத்தில் அல்ல, இருந்த இடத்திலேயே பல்டி அடித்துக் கொண்டிருக்கிறது. சர்பத்தில் நன்னாரியும் ஒரு அளவு தானே ஊத்த வேண்டும், அதற்கு மேல் ஊற்றும் போது சர்பத் அதற்கே அதற்கான சுவை அளவுகளிலிருந்து இறங்கிவிடும். சர்வோத்தமனின் சில கதைகளில் அந்த சறுக்கல் அல்லது அலுப்பு தெரிகிறது.

கவிதை – 03/15/22

ஆற்றங்கரைக் கோவில்
ஆற்று மணலில்
வெயில் கூட்டம்
சித்திரா பெளர்ணமிக்கு
அருள்வேண்டி
நிரம்பும்
கல் பாவிய
சித்தர் சன்னதிக்கு
வெளியில்
பிள்ளைக் கால்களாய்
முளைத்து நிற்கும்
வெள்ளைத் தூண்கள்

தங்கச் சங்கிலியுடன் ஒரு கூட்டம்
இரும்புச் சங்கிலியுடன் ஒரு கூட்டம்
தாகம் தீர்க்க மோர் கொடுக்குமொரு  கூட்டம்
தாவித் தடவித் தாகம் தீர்க்குமொரு  கூட்டம்
ஆசை தீர நடந்து திரியுமொரு கூட்டம்

மனம் நிறைய கனத்தோடு
கண்ணில் நீரடக்கி
நிற்பவனைத் தேடி
சின்னஞ்சிறிய
இதயத்தைத் தூக்கிக் கொண்டு
தத்தக்கபித்தக்கவென ஆடி வரும் குழந்தை
மொக்கவிழ்ந்த புன்னகையுடன் தன்னைத்தான் அருளிவிடுகிறது

இப்போது
கையில் சிரித்துக் கொண்டிருக்கிருக்கும் 
அந்த குட்டி இதயத்தை
அணைத்துக்  கொண்டிருப்பவன்
அதன் கதகதப்பில் உணர்வது 
பேரிருளில் துளி ஒளியை.. 

வேருக்கு நீர் – ராஜம் கிருஷ்ணா – வாசிப்பனுபவம்

நாம் ஏன் காந்தியைக் கைவிட்டோம்?

‘வேருக்கு நீர்’ புத்தகத்தின் முன்னுரையை வாசிக்கும் போதும் சரி, நாவலை வாசிக்கும் போதும் சரி, இந்த கேள்வி தான் எழுந்தது ‘நாம் ஏன் காந்தியைக் கைவிட்டோம்?’. உண்மையில் காந்தியைப் பற்றியும் காந்தியத்தைப் பற்றியும் மேலும் அறிந்து கொள்ளலாம் என்றும் , அவரது வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளை இன்னுமோ, புதிதாகவோ அறிந்து கொள்ளலாம் என்றும் தான் இந்த புத்தகத்தை வாசிக்க எண்ணினேன். 1990களில் பிறந்த எனக்கு, நமது துரிதமான கால ஓட்டத்திலும், சமூக/கலாச்சார மாற்றங்களின் வேகத்திலும் காந்தியை மெல்ல மெல்ல கை விட்டு விட்டோமோ என்று தோன்றியது. ஆனால் 52 ஆண்டுகளுக்கு முன் காந்தி நூற்றாண்டுக்காக எழுதப்பட்ட ‘வேருக்கு நீர்’ நாவல் எழுதப்பட்ட காலத்திலேயே நிலை இவ்வாறு தான் இருந்திருக்கிறது. சுதந்திரம் கிடைத்த வெறும் 20 ஆண்டுகளில் நாம் காந்தியை கைவிடத் தொடங்கிவிட்டோம். அதன் பின் நம்மோடு இருக்கும் காந்தி வெறும் சுவர் படங்களாக, ரூபாய் தாளில் ஓவியமாக மட்டுமே இருந்து வந்திருக்கிறார்.

வேருக்கு நீர் நாவலில் காந்தியவாதியான பெண் யமுனாவிற்கான பிரச்சனை வெறும் காந்தியவாதிக்கான/காந்தியை மக்களிடத்தில் எடுத்துச் செல்வதற்கானப் பிரச்சனை மட்டுமின்றி, ஒரு பெண்ணாக இந்த சமுதாயத்தில் இருப்பதே எவ்வளவு பிரச்சனை என்பதாகவும், ஒரு காந்தியவாதியாக வலுவிழந்த(மக்களின் மனதில் மட்டும்) சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டு அதன் உன்னதங்களை விதந்தோந்தி காந்தியை எளிய/வலிய மக்களிடம் கொண்டு போவது எப்படி என்பதாகவும் காந்தியத்தின் முன்னுள்ள சவால்கள் என்னென்ன என்பதாகவும் இருக்கிறது.

இந்த நாவல் காந்தியின் நேரடி அரசியல் வழிமுறைகளை பேசுவதைக் காட்டிலும் சமூக அரசியல் வழிமுறைகளைப் பற்றியே அதிகமும் பேசுகிறது. எடுத்துக்காட்டாக இதைக் கூறலாம், பவர் லூம்சே அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் இக்காலத்தில் காந்தி சொன்ன கைராட்டைப் பொருளாதாரம் வேளைக்காகுமா என்பது. உண்மை தான், ஆகாது தான். ஆனால் காந்தியின் அரசியல் கைராட்டையில் நூல் உற்பத்தி செய்து அதன் மூலம் வரும் பொருளாதார ஆதாயம் அல்ல. கைராட்டைக்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம் அந்நியத் துணிகளை எதிர்த்தல். நமக்கு தேவையானதை நாமே உற்பத்தி செய்து கொள்ளுதல், மீதத்தை ஏற்றுமதி செய்தல். பிரித்தானியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன் இந்தியாவின் GDP வளர்ச்சி என்பது 20 புள்ளிகளுக்கும் மேல் இருந்தது. அவை பெரும்பாலும் துணிகள் ஏற்றுமதியாலும், உணவு தானியங்கள் ஏற்றுமதியாலும் ஈட்டியவை. ஏற்றுமதி செய்யுமளவு அந்தியத் துணிகள் இருந்த நாட்டில் தான் பிரித்தானியர்கள் அவர்கள் நாட்டு துணிகளை கொள்ளை விலைக்கு விற்பனை செய்தார்கள். இந்தியர்கள் ஏற்றுமதி செய்த துணிகளை நடுக்கடலிலேயே நிறுத்தி நட்டமும் , பொருளிழப்பும் ஏற்படச் செய்தார்கள். இதை எதிர்த்து தான் காந்தி கைராட்டையை கையில் எடுத்தார். மக்களை கதருக்குத் திருப்ப எண்ணினார். இந்தியர்களை தொழில் செய்யவிடாது, கப்பல் வாடகையை ஏற்றியும், வாடகைக்கு விட மறுக்கவும் செய்த பிரித்தானியர்களை வ.உ.சி போன்றோர் நேரிடையாக எதிர்த்தனர். அவர்களை பிரித்தானிய அரசாங்கம் வஞ்சம் வைத்து பழி தீர்த்தது. ஆனால் காந்தியோ ஒவ்வொரு மக்களையும் பிரித்தானியர்களை எதிர்க்க வைக்க ஒவ்வொருவர் கையிலும் ராட்டையைக் கொடுத்தார். ராட்டை ஒரு அடையாளம், ஒரு ஆயுதம். அப்போது ராட்டை என்றால் இப்போது பவர் லூம்கள் எனலாம். வீடூகளிலே 1 தரி, 2 தரி போட்டு பொருள் ஈட்டுபவர்கள் எங்கள் ஊரிலேயே ஏராளம். காந்தியக் கோட்பாட்டின் படி நம் எண்ணமானது உள்நாட்டு உற்பத்தி, உள்நாட்டில் உற்பத்தி செய்த பொருட்களை வாங்குவதில் தான் இருக்க வேண்டும்.

இது போன்ற பல எண்ணங்களை வேருக்கு நீர் நாவல் நமக்கு ஏற்படுத்துகிறது. ஒரு சராசரி பெண் போலவே கல்யாணம் செய்து கொண்டு, சமூகச் சுழலில் சிக்கிய யமுனா எவ்வாறு கரை சேர்கிறாள் என்பது தான் கதை என்றாலும். எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணா அதை வெகு நேர்த்தியாக, சுவாரஸ்யமாக காந்திய சிந்தனைகளின் உன்னதங்கள், அதன் நன்மைகள், வன்முறை போராட்டங்களை எடுத்தாள்வதன் சிக்கல்கள் என பல்வேறு விசயங்களை கலந்து நேர்த்தியாகவும், சுவாரசியமாகவும் எழுதியிருக்கிறார். நவீன இலக்கியத்தில் இந்நாவலின் இடம் கேள்விக்குரியது என்றாலும் காந்தியத்தை மையமாக வைத்து சுவாரசியமாக எழுதப்பட்ட நாவல் என்னும் வகையில் தனித்துவமானது.

இந்த நாவலைப் பற்றி இரண்டே வரியில் சொல்வதானால் நாவலிலேயேக் குறிப்பிட்டிருப்பது போல்,
முதலாளித்துவம் மனிதனை அடிமையாக்கும்
பொதுவுடமை மனிதனை மிருகமாக்கும்

(கொள்கை ரீதியில் பொதுவுடமை உன்னதமான கொள்கை என்றாலும் அதில் உள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாக மேலே சொல்லப்பட்ட கருத்தை ஏற்றுதான் ஆக வேண்டும்.இந்த வரியை எழுதும் போதே ‘Animal Farm’ நாவல் நினைவுக்கு வந்தது. எனினும் நல்ல பொதுவுடமை வாதிகளும் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள், வஞ்சக காந்தியவாதிகள் இருப்பதைப் போல).

கவிதை – இருளொரு பாதி

இருளொரு பாதி
ஒளியொரு பாதி என
உயரத்தில் தகதகத்துக் கொண்டிருக்கிறாய்
உன் மூக்கின் நுனி வழி
பெருகும் ஒளியருவி சூரியனாகி
என் இரவுகளைக் கெடுக்கிறது
ஒவ்வொரு நாளும்
கட்டிலுக்கும் மார்கூட்டுக்கும் நடுவில்
தெருநாயைப் போல் இளைக்கும் இதயத்தை
கனவுகள் கொண்டு தேற்றுகிறேன்
சிறிதும் பெரிதுமென
பூத்து உதிரும் பொழுதுகளில்
உன் நினைவின் பிரதிகள்

நாம் தினசரி நடக்கும் பாதையில்
பலமுறை கடந்துவிட்டோம்
கண்கள் கூட சந்திக்காமல்
மீண்டும் நடப்போம்
மீண்டும் கடப்போம்
எப்போதும் போல் அப்போதும்
உடல் முழுதையும் கால் கட்டை விரலில் தாங்கி
கை நகத்து நுனியில் இதயத்தை ஏந்தி
உன்னிடம் மன்றாடுவேன்
இம்முறையேனும் பார்த்துவிடேன்?

பதாகை இணைய இதழ், சனவரி -2022ல் வந்த கவிதை

கவிதை 11/14/21

இலையுதிர் கால

மரயிலை போல

முதலில்

சொற்கள் நிறம் மாறுகின்றன

பின்

தினம் ஒன்றாக உதிர்ந்து

உங்களை விட்டு நீங்குகின்றன

ஒரு கட்டத்தில்

பைதா என்றால் என்ன என

மணிக்கணக்கில் நாட்கணக்கில் யோசிக்கிறீர்கள்

உங்கள் வட்டார நாவலில் வரும் சொற்கள்

உங்களுக்குப் பிடிபடுவதில்லை

பின் ஒரு நாள்

முழு இலைகளையும் இழந்த

மொட்ட மரத்தினைப் போல் ஆகிவிடும்

நாவில் வேர் விட்டிருந்த ஊர் மொழி

அன்று நீங்கள் அழுவீர்கள் அரற்றுவீர்கள்

வசந்த காலத்திற்காக காத்திருப்பீர்கள்

ஒரு நாள் இறந்தும் விடுவீர்கள்

கவிதை 11/12/21

ஆளும் பேரும்

தெரியா ஊரில்

இருந்திருந்து உண்பர்

நடந்து நடந்து தேய்வர்

கிடந்து கிடந்து பேசுவர்

நல்லபடி நாணயமாய் நடிப்பர்

அன்பர்

அறிவர்

என்பர் நண்பர்

அரை கிரவுண்ட் வீடு வாங்கி

குதத்தில் அடக்குவர்

வீக்கம் மறைக்க

நழுவித் திரிவர்

வீடு மாறும் நாளன்று

உதவி தேடி

மீண்டும் நாடுவர்

அன்பர்

அறிவர்

நண்பர் என்று.

கவிதைவாசி – 5

ஹைக்கூ கவிதைகள் எளிமையானவை. வடிவ ரீதியாகச் சிறியவை. வடிவம் சார்ந்த இலக்கணத்துக்கு உட்பட்டவை. அஃதாவது, ஹைக்குவானது மூன்று வரிகள் தான் இருக்க வேண்டும். முதல் வரியில் 5 வார்த்தைகளும், இரண்டாவது வரியில் 7 வார்த்தைகளும், மூன்றாவது வரியில் 5 வார்த்தைகளுமாக எழுதப்பட வேண்டும். அது நிற்க.

ஜென் தத்துவங்களும் ஹைக்கூ போன்றே எளிமையானவை. அறிந்த ஒன்றைப் பேசி அதன் பின்னால் இருக்கும் அறியாத ஒன்றின் இருப்பை உணரச் செய்பவை. சுருக்கமாக, மலைக்கு பின்னால் இருக்கும் அமைதியை உணரச் செய்பவை எனலாம். இதுவும் நிற்க.

ஜென் ஹைக்கூ என்னும் வகைமை ஒன்று உண்டு. ஜென் புத்தத் துறவிகளால் ஞானம் போதிக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டவை. நோக்கம் எனக் கூறுவது சரியா எனத் தெரியவில்லை. ஜென் கவிதைகளை தமிழின் பக்தி இலக்கியத்துடன் ஒப்பிடலாம் என்றாலும் ஜென் கவிதைகளின் அடிப்படை பக்தி கிடையாது. பின் ஏன் பக்தி இலக்கியத்துடன் ஒப்பிட முடியும் என்றால் இரண்டிலுமே கவிதையானது ஞானத்தைப் போதிக்கும் ஒரு மார்க்கமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எனில் பக்தி இலக்கியத்தில் இருப்பது போன்று ஜென் கவிதைகளில் (கடவுளிடம்) சரணடைதல் போன்ற ஏதொன்றும் இல்லை. அவை அளிப்பது ஒரு வகை வெளிச்சம். ஒரு தெளிவு. திறப்பு. மொக்கவிழ்தல். அந்த தெளிவை வைத்துக் கொண்டு என்ன செய்வது? அந்த முடிவை நம்மிடம் விட்டுகின்றன ஜென் கவிதைகள்.

கோ யுன் புகழ் பெற்ற கொரியக் கவிஞர். 1950களின் வாக்கில் இச்சை நிறைந்த மெட்டீரியலிஸ்டிக் வாழ்முறையைத் துறந்து ஜென் துறவியானவர். பின் 1960 வாக்கில் துறவைத் துறந்து மீண்டும் வாழ்வை ஏற்றுக் கொண்டார். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை தண்டனையும், வதைகளையும் அனுபவித்துள்ளார். அவரின் 24 கவிதைகள் கொண்ட சிறு தொகை நூலினை காவிரி இணைய சிறுபத்திரிக்கை பதிவேற்றியுள்ளது. விவேக் கிருஷ்ணன் மொழி பெயர்ப்பில், வே.நி. சூர்யாவின் செம்மையாக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்த 24 கவிதைகளை மட்டும் வைத்தே கோ யுனின் முக்கியத்துவத்தையும் அவர் கவிதைகளில் இருக்கும் ஜென் தத்துவங்களின் சாற்றையும் விளங்கிக் கொள்ள முடிகிறது. இதற்கு காவிரி இணைய சிறுபத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்.

24 கவிதைகளில் பெரும்பாலான கவிதைகள் ஜென் தத்துவச் சாயல்களை நிரம்பவும் கொண்டிருந்தாலும் முன்பு சொன்ன ஹைக்கூ வடிவ அமைப்பின் இலக்கணங்களுக்குள் அமையவில்லை. ஆகவே இக்கவிதைகளை நவீன ஜென் கவிதைகள் என வகைப்படுத்திக் கொள்ளலாம்.இனி வழக்கப்படி ஒரு கவிதை,

தாத்தா மெதுவாகப் பேசினார்
நீ இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்
அவசரப்படாதே
எருமை போல் நடை போட்டுக் கொண்டிரு
கூடவே அவ்வப்போது ஓய்வும் எடுத்துக் கொள்

நாம் எல்லோரும் எப்போதும் எதன் பின்னாவது ஓடிக் கொண்டேயிருக்கிறோம். பொருள் சேர்ப்பது என்பது இங்கு கட்டாயமான ஒன்று. புகழ் சேர்ப்பதும் அப்படியே. அதுவும் நமக்கு முன்னால் ஓடிக் கொண்டிருப்பவனை விட வேகமாக ஓடி அதிகம் சேர்க்க வேண்டும். இப்படி ஓடி ஓடிச் சேர்ப்பவர்கள் என்னதான் சாதிக்கிறார்கள்? அவர்கள் அடைவதாய் நினைத்து இழப்பது தான் அதிகம். பொருள்/புகழ் பின்னால் ஓடி உடலை, சொந்தங்களை இழந்துவிடுகிறார்கள். அவர்கள் களைத்து, நின்று , நிதானித்துத் தெளிவடைவதற்கு முன்னால் திரும்ப முடியாத ஓரிடத்தை அடைந்து விட்டிருக்கிறார்கள். அதன் பின் அவர்கள் அதிகமும் அனுபவிப்பது தனிமையும், அவஸ்தையும் தான். இதுவே அவர்கள் பொறுமையாக நடை போட்டிருந்தால்? நிதானமாக இருந்திருந்தால்? ஒருவேளை உடல் ரீதியான, உறவுகள் ரீதியான இழப்புகளைத் தவிர்த்திருக்கலாம். மேலே சொன்னது லௌகீக வாழ்க்கைக்கானது. இதே கருத்து போராட்ட களத்தில் இருக்கும் போராளிகளுக்கும் பொருந்தும். அவர்களுக்கும் நிதானம் என்பது வெகு அவசியமான ஒன்று. இக்கவிதையானது வாழ்வை உணர்ந்து தேறிய பெரியவர் ஒருவர் ஒரு இளம் பிராயத்தினன் ஒருவனுக்கு/ஒருவளுக்குக் கூறுவது போல அமைந்துள்ளது. இதே கவிதையைத் துறவி ஒருவர் கூறுவது போல் அமைதிருக்குமேயானால் அது வெறும் பிரசங்கமாக நின்றிருக்கும். தத்துவஞானி ஒருவர் கூறுவது போல் அமைந்திருக்குமேயானால் அங்கு எளிமையான ‘எருமை’யைச் சுட்டியிருக்கக் கூடிய வாய்ப்புகள் குறைவு. அதனால் கவிதையின் எளிமையும் , ஈர்ப்பும், அடிவாங்கியிருக்கும். வயதானவர் ஒருவரின் எதார்த்த வெளிபாடே கவிதையாகி அதன் உள்ளே ஆரம்பத்தில் சொன்ன கருத்துகள் யாவும் மறைத்து உணர்த்தப்பட்டதால் கவிதை ஜென் தன்மை அடைந்துவிட்டது.

24 கவிதைகளையும் வாசிக்க, https://kaavirimagazine.blogspot.com/2020/12/3.html?m=1

கவிதை – யுகக்காதல்

விதையாக

வெளியில் வீசப்பட்டு

அந்தரத்தில் வாசம் செய்யும்

சில நொடிக் காதலுக்காய்

யுகம் யுகமாய்

விண்ணோக்கி வளர்கிறது மரம்.

கவிதை – 23/10/2021

இலையுதிர் கால மரயிலை போல

முதலில் சொற்கள் நிறம் மாறுகின்றன

பின்னர்

தினம் ஒன்றாக உதிர்ந்து உங்களை விட்டு நீங்குகின்றன

ஒரு கட்டத்தில் பைதா என்றால் என்ன என

மணிக்கணக்கில் நாட்கணக்கில் யோசிக்கிறீர்கள்

உங்கள் வட்டார நாவலில் வரும் சொற்கள் உங்களுக்குப் பிடிபடுவதில்லை

பின் ஒரு நாள்

முழு இலைகளையும் இழந்த

மொட்ட மரத்தினைப் போல் ஆகிவிடும்

உங்கள் நாவில் வேர்விட்டிருந்த ஊர் மொழி

அன்று நீங்கள் அழுவீர்கள் அரற்றுவீர்கள்

வசந்த காலத்திற்காக காத்திருப்பீர்கள்

ஒரு நாள் இறந்தும் விடுவீர்கள்

கவிதை – வகையிலி

வெகு எளிதாக குறித்துவிட முடிகிறது

பெயர் தெரியாத ஒரு மலரை

சிவப்பு மலர் என்றோ கறுஞ்சிவப்பு மலரென்றோ

பிரயத்தனமின்றி சுட்டிவிட முடிகிறது

இனம் தெரியாத ஒரு விலங்கினை

மிருகம் என்றோ பிராணி என்றோ

என்ன செய்வதென்று தான் தெரியவில்லை

இன்னவென்று வகைப்படுத்த முடியாத

மனிதப் பிராணிகளை..