கவிதை – தூத்துக்குடி டிப்போ வண்டி

images

மண்ணில் விழுந்த குருதித் துளிகள்                                                                               விண்ணை அடைந்தன போலும்
சில மனங்களின் கருமை மேகத்தில் படிந்திருக்கலாம்
இழப்பின் வலி பனை போல்
உயர்ந்திருக்க வாய்ப்புண்டு

விளதையில் இருந்து தூத்துக்குடி செல்லும் அரசு டிப்போ வண்டியில் தொடர்கிறது பயணம்
இடையிடையே கேட்ட நடத்துனரின் சில்லறை குரல் தவிர
போராட்டகார்களின் முழக்கங்களோ
துப்பாக்கிகளின் சத்தமோ
அப்பாவி மக்களின்
அவயக் குரல்களோ இப்போது இல்லை.
காற்றின் இடைவெளிகளில்
காலம் மெல்லக் கரைகிறது

இருந்தும்

அந்தியின்
செந்தூரம் எஞ்சிய வானும்
கருமேகத் தீவுகளும்
இருள் தின்னும் பனைகளும்
பின்னகரும் ஒரு சன்னலோர
பேருந்து பயணம் முடிந்ததும் முடியாது
நீள்கிறது.

வற்றா நதி – கார்த்திக் புகழேந்தி – வாசிப்பனுபவம்

உலகில் எவ்வளவோ நதிகள் உண்டு. எவ்வளவோ கல் மண்டபங்கள் உண்டு. ஆனால்,நதியையும் கல் மண்டபத்தையும் ஒருசேரக் காணும் எந்த நெல்லை மாவட்டத்தானுக்கும் அடுத்த நொடி அவன் மனம் நிற்பது தாமிரபரணிப் படித்துறையில்.

வற்றா நதி நூலின் முகப்பு அட்டையின் வடிவமைப்பு சந்தேகமேயின்றி அந்த மனநிலையைத் தருகிறது.உண்மையில் வற்றாநதி சிறுகதைத் தொகுப்பை வாங்குவதற்கான உந்துதலே அதிலிருந்து தான் ஆரம்பித்தது.மொத்தம் 21 கதைகள் கொண்டத் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் ஒரு முயற்சி. கதையின் வடிவத்தில் கதையாடும் விதத்தில் ஒவ்வொன்றும் ஒரு ரகம். குறிப்பாக

கிறிஸ்டி ஒரு டைரிக் குறிப்பு’ சிறுகதையின் வடிவம் டைரிக்குறிப்பின் வடிவத்திலேயே எழுதப்பட்டு அதே சமயம் சிறுகதைக்கானத் தாக்கத்தையும் ஏற்படுத்திவிடிகிறது.

‘169 கொலைவழக்குகள்’ மேலாட்டமாக, கதைசொல்லும் விதத்தில் சாதாரண கதையாகத் தோன்றினாலும் அது பேசும் தனிமனித உளச்சிக்கல் அதனை முக்கியமான கதையாக்குகின்றது. சிறுவயதிலிருந்தே விமானியாக வேண்டுமென நினைக்கும் ஒருவன் ஊர்ப் பேச்சை புறம் தள்ளி, நிலபுலன்களை  விற்று தன் இலட்சியத்தை அடைகிறான். தான் வென்றுவிட்டதாக எண்ணிப் பெருமித வாழ்க்கை வாழும் சமயத்தில் அவன் ஓட்டிச் செல்லும் விமானம் விபத்துக்குள்ளாகிறது.அவனைத் தவிர விமானத்தில் பயணம் செய்த பயணிகள்,சக ஊழியர்கள் என அனைவரும் உயிரிழந்துவிடுகின்றனர். அவர்கள் அனைவரின் மரணத்திற்கும் ஒரே சாட்சியாக, ஒரே காரணியாகத் தன்னை எண்ணிக் கொள்கிறான். இந்த உணர்வு அவனை 169 பேரையும் அவனே கொன்றுவிட்டதான மனநிலைக்கு எடுத்துச் செல்கிறது. சிறுகதையில் இத்தகைய உளச்சிக்கலை கடத்துவது சிறிது கடினமாயினும், கதையாசிரியர் தன் சீரிய வார்த்தை கட்டமைப்பாலும், தெளிவான கதைத்தலைப்பினாலும் அதை எளிதாக சாத்தியப்படுத்தியிருக்கிறார்.

இதே போல் உளவியலைக் கருவாகக் கொண்டு அமைந்துள்ள மற்றொரு கதை ‘உதிர்ந்து விழும் அஸ்திவாரங்கள்’. ஐம்பத்தைந்தை தாண்டிய ஒருவர் அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்ற பிற்பாடு தன் மனைவியுடன் எவ்வாறெல்லாம் நாளைச் செலவழிக்க வேண்டும் என திட்டமிடுகிறார். இத்துணை வருடங்கள் தனக்காக, தன்னையே அர்பணித்துக் கொண்ட துணைவிக்கு இனியேனும் உதவியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணிக் கொள்கிறார். நாட்கள் செல்கிறது ஓய்வுபெறும் நாளும் வருகிறது அன்றே அவரது மனைவியும் இறக்கிறார்.திட்டங்கள் தவிடு பொடியாகின்றன.மனம் விட்டு பேச பிள்ளைகள் இல்லை, மனதை மடை திருப்ப பேரன்|பேத்தி இல்லை.புலம்பெயர் வாழ்க்கையில் ஆறுதல் சொல்ல சொந்த ஊர் மக்களில்லை. தனிமை வெளியில் அவர் மனம் மனைவியையேச் சுற்றிச் சுற்றி வருகிறது. இது தான் ‘உதிர்ந்து விழும் அஸ்திவாரங்கள்’ கதையின் பேசுபொருள். உணர்வால் அணுக வேண்டிய இக்கதையை போதுமான விவரிப்புகளாலும் ,  கடகட சொல்லமைப்புகளாலும் , நாயகனின் மனநிலையை  செம்மையாக நமக்கு கடத்திவிடுகிறார் கதாசிரியர்.

‘சிவந்திபட்டி கொலைவழக்கு’, ‘பிரிவோம் சந்திப்போம்’, ‘பொங்கலோ பொங்கல்’ கதைகள் முறையே ஏமாற்றத்தின் குரோதத்தையும், பதின்பருவ காதலின் வலியையும், வாலிபத்தின் குசும்பையும் திகட்டாது பரப்பிச் செல்கின்றன.

இந்த மொத்தத் தொகுதியிலும் 2 கதைகள் என் மனதிற்கு மிக நெருக்கமானவை. முதலாவது ‘குடுப்பினை’. குடுப்பினை கதையை பிடிக்க காரணம் அது நான் நினைப்பதையே பேசுகிறது.என்னை பிரதிபலிக்கிறது அல்லது நான் அதில் வரும் காந்தியைப் பிரதிபலிக்க முயன்று கொண்டிருக்கிறேன்.சொந்த ஊரை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் குடுப்பினை பிடிக்கும் என்றே நினைக்கிறேன். அடுத்ததாக, ‘அப்பாவும் தென்னைமரங்களும்’.சுயவரலாறு போல் நீளும் கதையில் அதன் இயல்பான எழுத்து நடையும், சூழலியல் விவசாயம், இயற்கை விவசாயம் குறித்த அவசியமும் விவரிப்புகளும், கதை முழுக்க பொதிந்துள்ள யதார்தங்களும், கதையினைவிட்டு எட்டிவிடாதபடி கெட்டியாகப் பிடித்துக் கொள்கின்றன. நிச்சயமாக, ‘அப்பாவும் தென்னைமரங்களும்’ நெய்யில் இட்ட முருங்கையிலை போல மணமான கதை.

‘காற்றிலிடைத் தூறலாக’ மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இளைஞர் ஒருவரைச் சுற்றி நகரும் கதை. கிட்டத்தட்ட, சொந்த ஊரைவிட்டு வேலையின் பொருட்டு புலம்பெயர்ந்த இன்றைய தலைமுறை மென்பொறியாளர்கள் எண்ணத்தின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பாகவே இக்கதையை கூறலாம். அந்த வகையில் சமூகத்திற்கு அறிமுகம் செய்யப்பட வேண்டிய மிக முக்கியமான கதை. ஆனால் வாசிப்பின் ஓட்டத்தில் சேரும் முன்னரே கதை அவசரமாக அதன் முடிவை அடைந்துவிடுவது போன்று தோன்றுவது கதையை சுவாரஸ்யமற்றதாக்கிவிடுகிறது.

இதே போல், ‘பற்றியெறியும் உலை‘ கூடங்குளம் அணுஉலைப் போராட்டத்திற்கு ஆதரவான ஒரு சித்தரிப்புக் கதை. அணுஉலைக் கழிவுகளாலும், விபத்தினாலும் ஏற்படும் பாதிப்புகளை விவரிக்கும் ஒரு புனைவு. இங்கு கதை நிகழும் காலம் எதிர்காலம் என்பதாலும் அதை கதையின் ஓட்டத்தில் சரியாக ஒட்டச் செய்யாததாலும் கதையை உள்வாங்குவதில் சிக்கல் வருகிறது.மற்றபடி கதை தன் முடிவினை நெருங்குகையில் தான் சொல்ல வந்ததை சரிவர வாசகர்களுக்குக் கடத்திவிடுகிறார் ஆசிரியர்.

மொத்தத்தில், ‘வற்றா நதி’ தொண்ணூறுகளில் பிறந்து, நாவிலும், மனத்திலும் ஊரைச் சுமந்து திரியும் எந்தவொரு நெல்லை மாவட்டத்தானுக்கும் ஒரு நினைவுப் பெட்டகம். இதில் வரும் பெரும்பாலான கதைகள் திருநவேலி வட்டார வழக்கிலேயே அமைந்திருப்பது கதைகளை எளிதாக அவ்வாழ்க்கையுடன் இணைக்கிறது. இக்கதைகளின் மாந்தர்கள் நாமாகவோ அல்லது நம் நண்பனாகவோ அல்லது நண்பனின் நண்பனாகவோ அல்லது அவன் ஊர்காரனாகவோ இருக்கிறான். அதனால, மாப்ளைகளா.. யாரு இந்த புக்க வாசிக்காகலோ இல்லயோ நம்ம பயலுக கண்டிப்பா வாசிக்கனும்டே. ஏனா, இது நம் மக்களின் கதைப் பெட்டகம்.

புத்தகம் –  வற்றா நதி
ஆசிரியர் – எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி
பதிப்பகம் – ஜீவா படைப்பகம்

தாய்- மாக்சிம் கார்க்கி. தமிழில் – தொ.மு.சி. ரகுநாதன்

ஒரு புதிய சித்தாந்தத்தை அறிமுகப்படுத்தும் நாவல் எப்படியிருக்க வேண்டும்? அதன் சமகால அவசியத்தை எடுத்துரைக்கும் நாவல் எப்படியிருக்க வேண்டும்? அதன் எதிர்கால தேவையை எடுத்துரைக்கும் நாவல் எப்படியிருக்க வேண்டும்? இந்த அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் ‘தாய்’ நாவலைப் போலிருக்க வேண்டும் என்பது தான்.

ஒரு குடிகாரத் தொழிலாளியின் இளவயது மகன் தன் தந்தை இறந்தபின் ஒரு நாள் அவன் தந்தையைப் போலவே குடித்துவிட்டு வீட்டிற்க்கு வருகிறான். அதைக் கண்டு விம்மும் தாய் எங்கே அவனும் அவன் தந்தையைப் போல் குடித்து குடித்து, பாழாய் போன அந்த சமூதாயச் சங்கிலியிலேயே ஒரு கண்ணியாய் ஆகிவிடுவானோ என துக்கப்படுகிறாள். இனியும் குடிக்காதே எனக் கண்டிக்கிறாள். ஆனால் இங்கு அனைவரும் குடிக்கத் தானே செய்கிறார்கள் அது ஒன்றும் தவறில்லையை என்கிறான் மகன். ஆம், ஆனால் அவர்கள் அனைவரும் குடித்தாலும் நீ குடிக்காதே (பாவெல்) பாஷா என்கிறாள்.

தந்தை உயிரோடிருந்த வரை எதுவும் பேசாது தனக்கென ஏதும் எதிர்பாராதிருந்த தாயின் வார்த்தைகள் பாவெலை ஏதோ செய்தன. இனி குடியை அடியோடு   விட்டுவிடுவதென முடிவு செய்கிறான்.

நாட்கள் கழிகின்றன. தன் மகனின் செய்கைகளில் மாற்றம் ஏற்படுவதை தாய் கண்டு கொள்கிறாள். மற்ற ஆண்மகன்கள் குடித்துவிட்டு வீதிகளில் விழுந்துகிடக்கும் போது பாவெல் புத்தகங்களுக்குள்ளாகவே மூழ்கி கிடக்கிறான். விடுமுறை நாட்களிலும் வீட்டில் இருப்பது இல்லை வெளியில் எங்கோ சென்றுவிட்டு தாமதமாகவே வீட்டிற்கு வருகிறான்.

மகனின் மேல் நம்பிக்கை இருந்தாலும் எங்கே தன் மகன் தவறான வழியில் சென்றுவிடுவானோ என அஞ்சி மனதில் தைரியத்தை வர வைத்துக் கொண்டு மகனிடம் இது பற்றிக் கேட்கிறாள். முதலில் தாய் தான் சொல்வதை புரிந்து கொள்வாளோ மாட்டாளோ என்று தயங்கும் பாவெல் பின் தான் ஈடுபட்டிருக்கும் சித்தாந்தத்தைப் பற்றியும் அதனால், அடிமைப்பட்டுக் கிடக்கும் தொழிலாளர் சமுதாயத்திற்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் எடுத்துரைத்தான். தன் மகன் ஈடுபட்டு வரும் சித்தாத்ந்தமும் அவன் கூறிய கருத்துக்களும் முழுமையாக புரியாவிடினும் அவன் அரசுக்கெதிராக, ஜார் மன்னருக்கு எதிராக ஈடுபட்டுள்ளான் என்பது மட்டும் அவளுக்கு புரிகிறது. இதனால் தன் மகனுக்கு ஆபத்து வரும் என அறிந்தும் உன் இஷ்டம் போல வாழப்பா என்கிறாள்.

நாளடைவில் பாவெலின் நண்பர்கள் அவனின் வீட்டிற்கே வந்து தங்கள் கருத்துக்களை, தாங்கள் படிக்கும் நூல்களை, தங்களின் கொள்கைகளை விவாதிக்கிறார்கள். இதிலிருந்து தாயும் சோசியலிச சித்தாந்தத்தின் அடிப்படைகளை, அதன் சிறப்புகளை ஓரளவேனும் அறிந்து கொள்கிறாள். அவர்கள் பேசிக் கொள்வது முழுதாக புரியாவிடினும் அவ்வப்போது அவளின் துயர் நிறைந்த கடந்த காலத்தை அவர்களின் விவாதக் கருத்தோடு  ஒப்பிட்டுப் பார்த்து, அச்சிந்தனைகளின் மகிமையினை உணர்ந்து கொள்வாள்.

பின் ஓர் நாள், தொழிலாளர் போராட்டத்தை முன் நின்று நடத்தியமைக்காக பாவெல் கைது செய்யப்பட, தன் மகனின் கொள்கையை முன்னெடுக்கும் பொருட்டு பிரச்சாரத் துண்டு பிரசுரங்களை சட்ட விரோதமாக தொழிற்சாலைக்குள்ளேயே வினியோகிக்கிறாள். இதை அறியும் போது தன் மகன் நிச்சயம் தன்னை எண்ணி பெருமைப்படுவான் என்பதற்காவே செய்கிறாள்.

சிறையிலிருந்து திரும்பும் பாவெல் சித்தாந்தத்தை பரப்பும் பொருட்டும், விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டும், தொழிலாளர்களை திரட்டும் பொருட்டும் ஒரு மாபெரும் பேரணியை நடத்த , அதனால் மீண்டும் கைதாகிறான். இதன் பிற்பாடு மகனின் நண்பன் இவானவிச்-சுடன் நகருக்கு குடியேறும் தாய் நீலவ்னா , அங்கு அவனின் அக்கா சோபியாவுடன் இணைந்து தீவிரமான இயக்க காரியங்களில் ஈடுபடுகிறாள்.தொடச்சியாக தன் மகனின் நண்பர்கள், நலம் விரும்பிகள், அவளின் பாதுகாப்புக் கருதி ஆபத்தான காரியங்களிலிருந்து விலக்கி வைக்க நினைத்தாலும் அவள் தன்னை முழுமையாக இயக்கத்தில் ஈடுபடுத்திக் கொண்டாள். இறுதியாக தன் மகனை நாடு கடத்தி வெளியேறும்படி தீர்ப்பு வந்த போதும் அவனது கொள்கைகளை, அவன் விசாரணையன்று நீதிமன்றத்தில் பேசிய விவரங்களை ஏழை எளிய, சாமானிய மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு கைதாகிறாள். கைதாகும் சமயத்திலும் தனக்கு தெரிந்த, தான் உணர்ந்த உண்மைகளை மக்களுக்கு கூறி மக்களை விழிப்படையச் செய்கிறாள் என்பதாக நிறைவடைகிறது நாவல்.

நாவல் முழுக்கத் தாயின் இந்தக் குரல் கேட்கிறது. ‘நம்முடைய சொந்தப் பிள்ளைகள், நமது பிள்ளைகள், நமது இரத்தத்தின் இரத்தமான குழந்தைகள், நியாயத்தின் பேரால் இந்த உலகில் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறார்கள். நம் அனைவருக்கும் உரிய நியாயத்துக்காக!’. இந்த நம்பிக்கை தான் தாயை இறுதி வரை போராட வைத்தது.

மேலும், நாவல் முழுவதும் சோசியலிச சிந்தனைகள், அதனால் ஏற்படும் மாற்றங்கள், அதைப் பற்றிய கனவுகள், அதை அடையப் போராடும் தனி மனிதன் இழக்கும் இழப்புகள், அவன் குடும்பம் அடையும் துக்கங்கள், போராளி கொண்டிருக்க வேண்டிய கொள்கைப் பற்று, உறுதி, வேட்கை, எதிர் இருக்கும் தோல்விக்கான சாத்தியக்கூறுகள் என அனைத்தையும் நாவல் பேசுகிறது.

மொத்தத்தில், ஒரு புரட்சி வீரனை அடிப்படையில் இருந்து தயார் செய்யும் பாடம் தான் தாய் நாவல்.

தாய் – மாக்சிம் கார்க்கி. தமிழில் – தொ.மு.சி. ரகுநாதன்
தோழமை வெளியீடு

 

 

பதிவு:- தை- 11. திருவள்ளுவர் ஆண்டு- 2048
ஜனவரி – 24 , ஆங்கில ஆண்டு – 2018

செம்மாரி(ஆறறிவு ஆடு) – சமுர

நாவலின் பெயரை அதன் குறிப்பு வரியோடு(tagline) வாசித்த போது அதீத சக்திகளைக் கொண்ட ஆட்டினைச் சுற்றி நடக்கும் கதை என்றுதான் எண்ணினேன். உண்மையில் செம்மாரி நாவல்,  செம்மாரி என்ற ஆடு மேய்க்கும் இளைஞனை மையமாகக் கொண்டு நிகழும் கதை.

தான் உண்டு தன் நாடோடிக் குடும்பமுண்டு என ஆடு மேய்த்து சந்தோஷமாக நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கும் செம்மாரிக்கு அவன் ஆடு மேய்க்கும் காவிரிக் கரைக்கு அருகில் புதிதாகக் கட்டப்படும் மண்டபத்தில் வேலை செய்யும் துணைத் தலைமைச் சிற்பி நகலனின் மூலமாக ஆடுபுலி ஆட்டம் அறிமுகமாகிறது. இயல்பிலேயே நுண்ணறிவுள்ள செம்மாரி ஆடுபுலி ஆட்டத்திலும் வல்லவனாகிறான். அதுவே பின் அவனுக்கு வில்லங்கமாகவும் அமைந்துவிடுகிறது. செம்மாரிக்கு ஆடுபுலி ஆட்டத்தைக் கற்றுக் கொடுத்த நகலனுக்கு இக்கட்டான நேரத்தில் உதவப் போக, செம்மாரியும் அவன் குடும்பத்தாரும் தன் நாட்டின் மன்னர், எதிரிநாட்டுத் தளபதி, முரடன் கோடாரி என மூவருக்கும் பொது எதிரி ஆகின்றனர். இப்பிரச்சனைகளிருந்து தன் குடும்பத்தை தான் நன்கு அறிந்த ஆடுபுலி ஆட்டத்தி்ன் யுக்திகளைக் கொண்டு எவ்வாறு செம்மாரி காப்பாற்றுகிறான் என்பதே செம்மாரி நாவல்.

நாவலின் களமாக புனையப்பட்ட வரலாற்றைத் தேர்ந்தெடுத்துள்ளார் ஆசிரியர். அவரின் கற்பனைக் குதிரைகளை விரட்ட இதைவிட வேறு சிறந்த களம் இருக்க முடியாது. நாவல் நெடுக ஆங்காங்கே,சிந்தனைகளையும், அரசியலையும் , பண்டைத் தமிழர்களின் அறிவியல் யுக்திகளையும் கதைக்கு சிறிதும் இடையூறு தராத வகையில் தூவிச் சென்றிருக்கிறார். வெகுகுறிப்பாக பாறையைப் பிளக்கப் பண்டைத் தமிழர் பயன்படுத்திய முறை, கோபுரங்களின் உயரங்களை அளக்க பயன்படுத்திய முறை என அறிவியலையும், “அரசர்களும், ஆட்சியாளர்களும் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றமாட்டார்கள். ராஜதந்திரங்கள் பலவும் செய்து, தாங்கள் நினைத்ததை நிறைவேற்றுவர். நீ உன்னை இழப்பதால், எந்த நல்லதும் நடக்காது” என எக்காலத்துக்குமான அரசியல் விமர்சனத்தையும் பேசுகிறார்.

செம்மாரி நாவல் நிகழ்ச்சிகளுக்கு திரும்பத் திரும்ப தெளிவு தரப்பட்டு சிறுவர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. அவர்களின் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அறிவியல் துணுக்குகளும் உண்டு. எடுத்துக்காட்டாக நாவலின் ஓரிடத்தில் “அவர்களுடன் சேர்ந்து, பூமி அன்னையும் தன் புவிஈர்ப்பு என்னும் பாசக்கயிற்றால் இழுத்தாள்” எனவும் “அந்த அலறல் சத்தத்தை குகை மிகவும் பெரிது படுத்தியது, எதிரொலியால்” எனவும் குறிப்பிடப்படுவது சிறுவர்களின் வாசிப்பார்வத்தை தூண்டிவதோடு நில்லாமல் அறிவியலையும் கற்பித்துவிடுகிறது. மேலும் தகுதியில் உயர்ந்த நகலன் தனக்குத் தக்க சமயத்தில், உதவிய செம்மாரிக்கு விழா எடுப்பது ‘நன்றி மறவான்மை’ எனும் உயரிய பண்பை கற்பிக்கிறது. இது தவிர, இன்னும் சிறுவர் கற்றலுக்கான பல விடயங்கள் இருக்கின்றன. இவை செம்மாரியை பெரியவர்களுக்கான நாவலாக மட்டும் இல்லாமல் சிறுவர் வாசிப்புக்கான நூலாகவும் கருதச் செய்கின்றன.

கதையில், அதன் போக்கில், அதன் வேகத்தில் எவ்வளவோ நிறைகள் இருந்தும் அது கூறப்படும் மொழிநடை சமயங்களில் நாவலின் தரத்தை சிறிதே மட்டுப்படுத்திவிடுகிறது. மொழிநடை என நான் கூறுவது கதாப்பாத்திரங்கள் தங்களுக்குகள் பேசிக் கொள்ளும் மொழி அல்ல. ஆசிரியர் அவராக பல இடங்களில் பயன்படுத்தும் எதுகை மோனைத் வாக்கியங்கள் மற்றும் சிலேடைகள். ஒவ்வொரு அத்தியாத்தின் முகப்பிலும் அவ்வத்தியாத்தின் கதையை கவிதை வடிவில் சொல்லும் முயற்சி புதிதெனினும் அது வாசிப்பில் சிறு தொய்வை ஏற்படுத்துவதை மறுக்கமுடியாது.

நூலை அனுப்பிவைத்தமைக்கு நாவலாசிரியர் சமுர-விற்கு என் நன்றிகள்.

கல் சிரிக்கிறது – லா. ச. ரா

தர்ம ராஜ் என்கிற தருமு. எங்கெங்கோ தேசாந்திரம் சுற்றி கடைசியில் ஒன்றுவிட்ட சகோதரனைத் தேடி, தன் வம்சாவளி உரிமையான கமலாம்பிகை கோவில் பூஜை கைங்கர்யம் முறை   பங்கு கேட்பதில் தொடங்குகிறது நாவல். தருமு தன் மனைவி மகளைப் பிரிந்து வாழும் ஒண்டிக் கட்டை. வங்கி சேமிப்பில் இருக்கும் பணத்திற்கு வரும் வட்டி தான் வாழ்வாதாரத்திற்கான ஒரே வழி. தர்ம ராஜ் அய்யர் தங்கியிருக்கும்   வீட்டிற்கு கீழே நாடாரின் வீடு. நாடார் உழைப்பால் உயர்ந்த மனிதன். அவரின் இந்த வளர்ச்சிக்கு அய்யர் அவர்களின் அருள் தான் காரணம் என்பது நாடாரின் எண்ணம்.  இந்த விந்தையான எண்ணத்திற்கு நாடார் கூறும் காரணம் அமானுஷ்யமானது. தருமுவினோடு  அவருக்கு கீழ் வேலை பார்த்தவள் கோமதி. கோமதிக்கு அவர் மகள் வயது இருக்கும் . அதனாலேயே அவருக்கு கோமதி மேல் அன்பு அதிகம். கோமதிக்கும் அய்யர் மீது அன்பு அதிகம். தன் சொந்த அப்பாவைப்  போன்ற   மரியாதை. சோகம் தளும்பும் கோமதியின் வாழ்க்கை வீணாகி விட கூடாதென மனக்சந்த் வீட்டிற்கு வேலைக்கு போகிறார் அய்யர்.

மனக்சந்த், நகையை அடகு வாங்கி பணத்தை வட்டிக்கு விடுபவன். இராஜஸ்தானி. இருதய நோயாளி. கோமதி மனக்சந்த்திடம் பெற்றிருக்கும் கடனுக்காக அவரின் தயவைப் பெற்றிட எண்ணி சமையல்காரனாக மனக்சந்திடம்  வேலைக்குச் சேர்கிறார் தரும ராஜ். சமய சந்தர்ப்பங்களினால், மனம் ஆடும் சடுகுடு விளையாட்டிற்கு பலியாகி மனக்சந்த்திடம் நகையைத் திருட எதேர்ச்சையாக அதே தினம் இருதய நோயாளி மனக்சந்த் மரணித்துவிட, மனக்சந்த் உடனே தங்கி பணிபுரியும் தரும ராஜின் மீது பழி விழுகிறது.

இந்த நிகழ்வும் இன்ன பிற முன் நிகழ்வுகளும் முன்னுரையில் குறிப்பிடும் தத்துவ எதார்த்தத்தோடு இணைக்கப்படுவதாக இருக்கிறது ‘கல் சிரிக்கிறது’ நாவல்.

கூரிய வாளின் முனை போல கிழித்து எறிந்துவிட்டும் எழுத்து லா.ச.ரா-வினுடையது. பெரும்பாலான அவரின் வரிகள் மெல்ல அசை போட ஆரம்பித்து பின் மனதை அதிலேயே நிலை கொள்ளச் செய்துவிடுபவை. ‘கல் சிரிக்கிறது’ எனும் தலைப்பும் அதன் முன்னுரையும் அத்தகையவை தான். ஆனால் நாவல்  முழுமையும் ஏனோ அந்த ஈர்ப்பு இல்லை.அதற்கு  கதை அதன் கருவை அடையாளம் காட்ட எடுத்துக்கொள்ளும் நேரமோ , கதையின் நாயகனாக வரும் தருமு கதாபாத்திரத்தின் தெளிவின்மையோ , தருமு அவரது சுற்றதினருடன் கொண்டாடும் உறவுகள் தெளிவுற விவரிக்கப்படாமையோ , கதையில் அமானுஷ்யமாக கூறப்படும் நாடார் – தருமு உறவோ, அல்லது தெளிவாக சொல்லப்படாத இவை யாவும் கதையின் ஓட்டதுக்கே அந்நியப்பட்டு நிற்பதுவோ காரணமாக இருக்கலாம்.

எது எவ்வாறாயினும் மனக்சந்த்-தருமு மற்றும் கோமதி- தருமு ஆகியோரிடையேயான உறவுகளும் , மனக்சந்த் மரணத்திற்கு பிறகானத் திருப்பங்களும், நூலின் முன்னுரையில் கூறப்பட்டுள்ளத் தத்துவ, எதார்த்தம் தவிர வேறேதும் உவப்பாய் இல்லாதது ‘கல் சிரிக்கிறது’ நாவலை சாதாரண வாசிப்பனுபவமாக்குகிறது.

நாவல் – கல் சிரிக்கிறது
ஆசிரியர் – லா.ச.ராமாமிர்தம்
பதிப்பகம் – டிஸ்கவரி புக் பேலஸ்

இறப்புக்கு அப்பால் – சிறுகதை

எமலோகத்தின் வாசற்கதவொன்றும் திரைப்படங்களில் காண்பிப்பது போன்று அரண்மனைக் கதவு போலில்லை. மாறாக, குடிசை வீட்டின் இழுகதவைப் போல் தான் உள்ளது. இறந்து முழுதாக ஆறு மணி நேரம் கூட ஆகாத மாதவன் எனும் உடலாகிய சட்டையை உதறி விட்டு வந்திருந்த மானுட ஆத்மாவின் எண்ண ஓட்டம் தான் இது.

மாதவன் கதவைத்  திறந்து உள்ளே நுழைந்தான். அங்கு கிங்கணர்கள் இல்லை,சித்ர குப்தன் இல்லை,எமனும் இல்லை மற்றும் எவனும் இல்லை. அவன் கற்பனை செய்த ஏதும் இல்லா எமலோகம் ஏமாற்றம் மிகுந்ததாகவும் பயம் தருவதாகவும் இருந்தது. அங்கும் இங்கும் பார்த்துப் பார்த்து கலைத்தவனாய், அருகில் இருந்த திண்ணையில் அமர்ந்தான். அவன் பார்த்த வரையில் பூலோகத்திற்கும், எமலோகத்திற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை, சூழலைத் தவிர. சுத்தமான காற்று, புடைசூழ மரங்கள், நிரம்ப அமைதி, வடக்கே சூரியன்,தெற்கே சந்திரன் என நிறைவாய் வழிந்தது எமலோகம்.

அவன் அமர்ந்திருந்த திண்ணையின் வீட்டிலிருந்து பெரியவர் ஒருவர் வெளியே வந்தார். வந்திருக்கும் நபர் புதியவர் என அவருக்குப் புரிய வெகு நேரம் ஆகவில்லை. புரிந்ததும் அவர் கண்ணில் ஆதரவாய் ஒரு புன்னகை, முகத்தில் சிரிதாய் அன்பருவி.

என்னப்பா, இது எமலோகந்தானா?இல்ல வேற எதுவும் உலகத்துக்கு மாறி வந்துட்டோமானு நினைக்கிறியா? – பெரியவர்

ஆம். மாதவனுக்கு அந்த சந்தேகம் இருக்கத்தான் செய்தது. எனினும், எமலோகத்தின் ததும்பும் அமைதியும் இதமான காற்றும் அவனை எங்கோ லயித்திருக்க செய்தன.ஆனால், இவரிடம் ஆம் என்பதா?இல்லை என்பதா? இவர் யார்? ஒரு வேளை இவரே எமனாக இருப்பாரோ?சே இல்லை. எமன் ஆஜானுபாகுவாக பூண்களும் கிரீடமும் தரித்திருக்கமாட்டானாயினும், நிச்சயமாக தேறிய ஆகிருதியுடன் முன்முதிர் வயதினனாகத்தான் இருப்பான் என எண்ணியவனாய், வெறும் புன்னகையை மட்டுமே பதிலாக அளித்தான்.

இருவரும் ஒருவரை ஒருவர் அறிமுகம் ஆகாமலேயே அவர்கள் முன் நீண்ட, ஒற்றையடிப் பாதையில் நடக்க ஆரம்பித்தனர். அதானே, உடலாகிய காற்றடைத்த பைக்குத் தானே மாதவன்,ஆதவன்,மணி என அறிமுகம் தேவை. அனைத்தையும் துறந்த ஆத்மாவிற்கேது பெயர்!

தரையை நோக்கியே பார்வையை பதித்து வந்த மாதவனின் முகத்தில் சிந்தனை ரேகை தறிகெட்டோடியது. காட்டு வெள்ளமாய் அடைப்புடைத்த சிந்தனை வார்த்தைகளாய் கொட்ட ஆரம்பித்தது.

நாம் போய்க் கொண்டிருப்பது சொர்க்கத்தை நோக்கியா இல்லை நரகத்தை நோக்கியா?  – மாதவன்

ஞானத்தை நோக்கி  – பெரியவர்

மாதவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒரு நொடி பெரியவரின் முகம் பார்த்தான். அவர் முகத்தில் எந்த சலனமும் இல்லை ,அலைகள் அற்ற ஆழ்கடல் போல. அவர்கள் நடை தொடர்ந்தது.

உள்ளே செல்ல செல்ல ஒருபுறம் அழுகைகளாகவும் மறுபுறம் அமைதிப் பூங்காவாகவும் காட்சியளித்தது அப்பாதை.பெரியவர் இடது  புறத்தைக் காட்டி, அதோ அங்கே ஆண்களும்,பெண்களும்,குழந்தைகளும் ஓலமிட்டுக் கொண்டிருக்கிறார்களே அதுதான் நரகம். இதோ ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மாறா புன்னகையோடும் பெருமிதத்தோடும் நெஞ்சுயர்த்தி திளைக்கிறார்களே, இதுதான் சொர்க்கம்.வா அருகில் சென்று பார்க்கலாம் என்றார். முதலில் அவர்கள் நரகத்தை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

வழியெங்கும் பூந்தோட்டமும்,மரங்களும், நெடுக அமைந்திருக்க உள்ளே மக்கள்  கூட்டத்தின் அழுகை மட்டும் நில்லாமல் எழுந்து கொண்டிருந்தது. மாதவன் இப்போது இன்னும் உன்னிப்பாய் நரகத்தை கவனிக்கலானான். அங்கு ஓர் ஓரத்தில் விசாலமான அரச மர நிழலில் நான்கு பெரியவர்கள் கொண்ட குழு ஒரு ஆத்மாவிற்கு தண்டனை வழங்கி கொண்டிருந்தது.அது ஒரு மருத்துவமனையின் உயர் நிர்வாகியாக இருந்த மருத்துவரின் ஆத்மா. பூமியில் புரிந்த பாவ,புண்ணியங்களை துலாமில் நிறுத்துப் பார்க்க பாவத் தட்டு இறங்கி,புண்ணியத் தட்டு மேல் நின்றதால், தண்டனை நிறைவேற்றப்பட நரகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.அங்கு அதன் பாவக் காட்சிகள் வான் திரையில் ஒளிபரப்பி காட்டப்பட்டன.

அறுவை சிகிச்சைக்கு பணம் கட்டவில்லையெனில் தூக்கி எறி அவனை எனக் கூறி மருத்துவமனையை விட்டு வெளியேற்றப்பட்ட இருதய நோயாளியின் கடைசி நிமிடங்கள் அங்கு ஒளிபரப்பப்பட்டது. நோயாளியின் இறுதி ஊர்வலத்தில் அவனது காதல் மனைவி கதறி அழுது நிற்க, மிட்டாய் வாங்க அடம்பிடித்து அழுது புரண்டது குழந்தை. அது அறியுமோ தன் தந்தையின் இழப்பை ,தாயின் தவிப்பை, சூன்யமாகிப் போன அதன் எதிர்காலத்தை.அழுது புரண்ட சேயை அள்ளி அணைத்த தாயைக் கண்டு கதறி அழுதது மருத்துவரின் ஆத்மா.

மாதவனும் கசிந்த கண்களுடன் நகர்ந்து அடுத்த ஆத்மாவின் தண்டனையை கவனிக்கத் தொடங்கினான்.அது ஓர் ஏழை விவசாயியின் ஆத்மா.

ஓர் ஏழை விவசாயி என்ன பாவம் செய்திருக்கக் கூடும் என மாதவன் ஆவலுடன் எதிர்பார்க்கலானான்.விவசாயியின் பாவக் காட்சிகள் திரையிடப்பட்டன.அவன் நிலத்தில் ஓங்கி நின்ற பனை மரங்கள் சொற்ப பணத்திற்காக வெட்டப்பட்டதால் வீடிழந்த கிளி ஒன்று அழுது புலம்பும் காட்சி ஒளிபரப்பப்பட்டது.மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வந்த பாரம்பரிய பொந்தை இழந்த துயரம் அதன் நெஞ்சை அடைத்தது.கூடின்றி தவிக்கும் தன் பிள்ளைகளை எண்ணி துயர் கொண்டது.அருகில் தன் சகோதரியின் வீழ்ச்சிக்காக அழும் பனை மரங்களின் ஓலங்கள் கிளிகளின் வேதனைக்கு தூபம் போட்டன.தன் சுயநினைவின்றி நடந்த இந்த இன்னல்களை அறிந்த விவசாயியும் கண்ணீர்  விட்டழுதான்.ஆத்மா என்றானபின் மரம் என்ன?கிளி என்ன? கிரீடம் கொண்ட மன்னன் தான் என்ன?

மாதவன் பெரியவர் இருந்த இடம் நோக்கி நகரத் தொடங்கினான்.பெரியவர் புரிந்து கொண்டார், இருவரும் சொர்க்கம் நோக்கி நடக்கத் தொடங்கினர்.

சொர்க்கம் செல்லும் வழியும் நரகம் செல்லும் வழியைப் போன்றே மரங்கள்,செடிகள்,கொடிகள் என இயற்கை மனம் கமழ இருந்தது. மாதவனின் சிந்தனை முழுவதும் நரகத்தில் அவன் கண்ட காட்சிகளையேச் சுற்றிச் சுற்றி வந்தது. இதுநாள் வரையிலும் நரகமானது எண்ணைச் சட்டிகளும்,இரும்புச் சங்கிலிகளும்,ஊசிப் படுக்கைகளும் நிரம்பிய வதைக்கூடம் என்றே எண்ணியிருந்தான். பூவுலகில் உடலை விட்டு வந்த பின்னும் நரகத்தில் உடல் சார்ந்த வதைகள் எப்படி சாத்தியம் போன்ற பூலோக கேள்விகளுக்கான விடை இன்று நரகத்தில் அவனுக்கு கிடைத்தது.

பூவுலகில் வாழ்ந்த காலத்தில் தன் சுயநலனுக்காக சிந்தித்த,செயல்பட்ட எந்த உயிரும் இறந்த நொடியினில் சுயநலமற்ற, உயர்வு,தாழ்வு பேதமற்ற ஆத்மாவாகிறது.அதானால் தான் பூவுலகில் தன் சுயநலத்திற்காக செய்த பாவங்களை ஆத்மாவால் சகிக்க முடியவில்லை.பாவக்காட்சிகள் திரையிடப்படும் போது துடிதுடித்து கசிந்துருகி தன் பாவங்களுக்காக வருந்தி மோட்சத்தைத் தேடிக் கொள்கிறது. இவ்வாறாக எண்ணிக் கொண்டிருக்கையிலேயே மாதவனும்,பொரியவரும் சொர்க்கத்தை அடைந்திருந்தனர்.அங்கும் நான்கு பெரியவர்கள் ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்து ஆத்மாக்களுக்கு அவர்களது புண்ணிய நிகழ்வுகளை திரையிட்டுக் காட்டிக் கொண்டிருந்தனர்.

நரகம் போல் அன்றி சொர்க்கத்தில் ஆத்மாக்கள் உவகையுடனும் பெருமித்துடனும் சுற்றித் திரிந்தன.தாங்கள் செய்த நற்காரியங்களை திரையில் கண்டு உவகையில் திளைத்தன.

ஒரு பிச்சைக்காரனின் ஆத்மா, அவன் தன் சக்திக்கு ஏற்ப செய்த அன்னதானத்தால் உயிர் காக்கப்பட்டு மகிழ்வுடன் வாழும் நாய்க் குட்டியைக் கண்டு இன்புற்றான்.

உடலை விற்று உயிர் வளர்த்த விபச்சாரி ஒருத்தியின் ஆத்மா, கருகும் நிலையில் இருந்த வாழை மரத்திற்கு  நீர் விட,அதனால்  உயிர் பிழைத்த மரம் குழை தள்ளி அதன் பழங்கள் ஏழைக் குழந்தைகளுக்கு தானம் செய்யப்படுவதைக் கண்டு மகிழ்ந்துருகினாள்.

இவற்றையெல்லாம் கண்டு வியந்து கொண்டிருக்கையிலேயே மாதவன் தன் பாவபுண்ணியங்களை தானே துலாமில் ஏற்றி  நிறுத்துப் பார்க்க, பெரியவரின் கை மாதவனின் தோளை அழுத்தியது. மாதவனுக்கு புரிந்தது. சொர்க்கத்தின் மென்மையான அமைதியினூடே அவர்கள் நரகம் நோக்கி நடக்கத் தொடங்கினர்.

————————————————–முற்றும்————————————————————————

-ம.கிருஷ்ணகுமார் சிறுகதை

சித்திரை-30, திருவள்ளுவர் ஆண்டு – 2048

மே-13, ஆங்கில ஆண்டு-2017

அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்

ஜெயகாந்தனின் அதிகம் கவனிக்கப்படாத படைப்பு. ‘இந்த நேரத்தில் இவள்’, ‘பாட்டிமார்களும் பேத்திமார்களும்’, ‘அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்’ ஆகிய மூன்று நாவல்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒரு நாவலில் குழந்தையாக வரும் கதாபாத்திரம் மற்றொன்றில் வயோதிகமாக வந்து அதன் அனுபவத்தையும் வாழ்க்கையின் எதார்த்தத்தையும் பகிர்ந்து கொள்கிறது.

‘அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்’ நாவல் அப்பு எனும் பதின் வயது சிறுவனையும் அவன்தன் குடும்பத்தின் முந்தைய தலைமுறைப் புதிர்களை அவிழ்ப்பதை நோக்கியே விரிந்து செல்லினும், ‘குழந்தை உழைப்பு’ பற்றி நாவலில் வைக்கப்படும் கருத்து கவனிக்கத் தக்கது. இது பற்றி நாவலின் முன்னுரையிலேயே இவ்வாறு குறிப்பிடுகிறார் ஜெ.கே , ‘குழந்தை உழைப்பை கொடுமையாக்குவது எது? எல்லோருடைய உழைப்பும் சுரண்டப்படுகிற ஒரு சமூக அமைப்பில் உழைப்பின் மீதே மதிப்புக் குறையத் தான் செய்யும்’ ஆக, ஜெ.கே கருத்தின் படி குழந்தை உழைப்பு தவறானதல்ல ஆனால் குழந்தைத் தொழிலாளர் முறை தவறானது. சுரண்டல் தவறானது. இவை இரண்டும் ஒன்றோடென்று பிணைந்தக் கூற்றுகளெனினும் நாவலை ஆழ்ந்து வாசிக்கும் போது இந்த இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம் புலப்படுகிறது.

அப்புவை யாரும் வேலை செய் என்றோ இன்ன வேலையை செய் என்றோ வற்புறுத்துவதில்லை. அவன் மனதிற்கு பிடித்த வேலையை அவன்  செய்கிறான்.அவனுக்குப் பிடிக்கவில்லையெனில் நின்று கொள்கிறான். இது குழந்தை தொழிலாளருக்குப் பொருந்தாது. அப்பு தன் தகப்பனின் குடும்ப பாரத்தை இலகுவாக்கும் பொருட்டும்,அம்மாவின் ஆசையை ஈடேற்றும் பொருட்டும் அவனுக்கு கிடைத்த வேலையை செய்கிறான்.அங்கு தன் தன்மானத்திற்கும்,சுயமரியாதைக்கும் பங்கம் ஏற்படும் சமயங்களில் எவ்வித சமரசமும் இன்றி அவ்வேலையை  விட்டு விலகுகிறான். இது தான் அப்பு. இவ்வாறு தான் அவன்  வாழக் கற்றுக் கொண்டிருக்கிறான், வாழ உறுதி கொண்டிருக்கிறான்.

ஆறு வருடங்களுக்கு முன் தன் சொந்த கிராமத்தை விட்டு, குடும்பத்தை விட்டு சென்னை வந்துவிட்ட தந்தையை சந்திக்கும் அப்பு அவருக்கு இங்கும் ஓர் குடும்பம் இருப்பதை அறிந்ததும் அவர் மீது வெறுப்போ கோபமோ கொள்வதில்லை மாறாக அவன் அவரை மேலும் புரிந்து கொள்ளவே விரும்புகிறான். அப்பாவும் தன் வாழ்க்கை கதைகளை ஒவ்வொரு நாளும் அவனுக்கு கதைகளாகக் கூறுகிறார். இதுவே ‘அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்’.

பாரபாஸ் – பர் லாகர் குவிஸ்ட் தமிழில் க.நா.சு

மரண தண்டனையிலிருந்து குற்றவாளி ஒருவன் விடுவிக்கப்படுகிறான் அவனுக்குப் பதிலாக வேறொருவன் அந்த தண்டனையை அடைய வேண்டியதாகிறது. இவ்வாறு தான் பாரபாஸ் நாவல் ஆரம்பமாகிறது. இதில் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட குற்றவாளிதான் பாரபாஸ். அவனுக்குப் பதிலாக சிலுவையில் அறையப்பட்டு மரணிப்பவர் தான் கிறிஸ்து-ஏசு.

கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளிலிருந்து தன் வாழ்நாளின் கடைசி சில நொடிகள் வரை அவரை முழுமையாக நம்பிவிடுவதற்கான முயற்சியில் இருந்த பாரபாஸின் வாழ்க்கை நிகழ்வுகளே இந்த நாவலில் புனையப்பட்டுள்ளன.

தன் வாழ்நாளில் எங்கு போயினும் எதுவாக இருந்தும் – கொல்லைக்காரனாக ,சுரங்க அடிமையாக,வயல்களில் அடிமையாக,நகரில் மாளிகை அடிமையாக இப்படி என்னவாக இருப்பினும் கிறிஸ்து இவனுக்குப் பதில் சிலுவை ஏறியவர் என்ற அடையாளமே பாரபாஸ்-க்கு இருந்தது.இதற்காக வேணும்,தனக்காக சிலுவை ஏறியவரிடம் தனக்குள்ள விசுவாசத்தை காட்டவாவது அவரை பரிபூரணமாக,கடவுளின் மகனாக, நம்ப முயல்கிறான்.

கிறிஸ்து-ஏசு நிகழ்த்திய அதிசயங்களை வெறும் செவிவழியே கேட்டு அவர்பால் நம்பிக்கை கொண்டு அவரிடம் தன்னை முழுமையாக அர்பணிக்கத் தயாராய் இருந்த விசுவாசிகளைப் போல் இவனால் இருக்க முடியவில்லை. கிறிஸ்துவின் அற்புதம் என திரித்துக் கூறப்படும்  சில நிகழ்வுகள் நடைபெற்ற இடத்தில் இருந்து அவற்றை நேரில்  கண்டவன் இவன். எனவே அற்புதங்கள் எனப்படும் அந்த அரை உண்மைகளை முழு உண்மைகளாக இவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் தனியன் ஒருவன் கூறும் உண்மையை யாரும் நம்பிவிடப் போவதுமில்லை. அவனும் மற்ற விசுவாசிகளைப் போல கிறிஸ்துவை துதித்து கவலையற்றிருக்கவே எண்ணினான்.

நம்பிக்கைக்கும் நம்பிகையின்மைக்கும் உள்ள இடைவெளியை எந்த சமரசத்திற்கும் உள்ளாகாது கடக்க முயன்ற பாரபாஸ் எனும் தோல்வியுற்ற மனிதனைப் பற்றிய புனைவே  பர் லாகர் குவிஸ்ட்-ன் பாரபாஸ் நாவல்.